லியாங் என்ற நாட்டின் தலைமையமைச்சராக வெய்சு என்பவர் பதவியேற்றார். சில காலம் கழித்து ஷுவாங்சு என்பவர் அவரைச் சந்திக்கத் தலைநகருக்கு வந்திருந்தார்.
வெய்சுவுடன் இருந்த நண்பர் ஒருவர், “இப்போது ஷுவாங்சு தலைநகருக்கு வருவதற்குக் காரணம் என்னவென்று தெரியுமா? தங்களுடைய தலைமையமைச்சர் பதவியைப் பறித்துத் தான் தலைமையமைச்சராவதற்குத்தான் ஷுவாங்சு இங்கே வந்துள்ளார்” என்று கூறினார்.
இதைக்கேட்ட வெய்சுவுக்குக் குழப்பமேற்பட்டது. ஷுவாங்சு தன்னைவிடத் திறமைசாலி, நிச்சயம் நண்பர் சொன்னது போல், தன் பதவி பறிபோவதற்கான வாய்ப்புகள் அதிகம்தான் என்று உள்ளுக்குள் புழுங்கினார். சரி, முதலில் ஷுவாங்சுவை நாமே சந்தித்துப் பேசுவோம் என்று புறப்பட்டார்.
இதையறிந்த ஷூவாங்சு தானிருந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்குச் சென்று விட்டார்.
வெய்சு அந்த நகர் முழுவதும் தேடியும் ஷுவாங்சுவை கண்டுபிடிக்க முடியவில்லை. என்ன ஆனதோ, ஏதானதோ என்ற குழப்பமும், பதவி பறி போனால் நாம் ஒன்றுமில்லாமல் போய்விடுவோமே என்ற கலக்கம் மறுபுறமுமாய் வெய்சு அலைந்து திரிந்தும் ஷுவாங்சுவை காணமுடியாமல் திரும்பினார்.
சில நாட்களில் ஷுவாங்சுவே வெய்சுவை சந்திக்கச் சென்றார்.
தெற்கே ஃபீனிக்ஸ் என்ற ஒரு பறவை இருக்கிறது, அதைப் பற்றி நீ கேள்விப்பட்டதுண்டா? என்று வெய்சுவை நோக்கி வினவிய ஷுவாங்சு பதிலுக்கு காத்திராமல் தொடர்ந்தார்,
இந்த ஃபீனிக்ஸ் பறவை தென் கடலிலிருந்து புறப்பட்டு வட கடல் நோக்கிப் பறக்கும். மிக அழகான சிறப்புமிக்க பாராசால் மரம் தவிர வேறு எந்த மரத்திலுமோ, செடியிலுமோ சென்று அமராது. மூங்கில் பழங்களைத் தவிர்த்து, வேறு எதையும் உண்ணாது. சுவையான நீர்ச் சுனைகளில் மட்டுமே தாகம் தணிக்கும். வேறு எந்த நீரையும் பருகாது. இப்படி ஒரு நாள் ஃபீனிக்ஸ் பறவை வானில் பறந்து கொண்டிருக்கையில் கீழே ஒரு ஆந்தை செத்து அழுகிப் போன ஒரு எலியை சாப்பிடத் தயராக இருந்தது. ஃபீனிக்ஸ் பறவை ஆந்தையைக் கடந்து சென்ற போது, ஆந்தை மேலே அண்ணாந்து பார்த்து, ஃபீனிக்ஸ் பறவையை விரட்டும் தொனியில் “சூ” என்றதாம். என்ன நீயும் உன் தலைமையமைச்சர் பதவியைக் கொண்டு என்னை “சூ” என்ற துரத்தப் பார்க்கிறாயா என்றார்.
வெய்சு வெட்கி தலைகுனிந்தார்.