உலகின் தலைச்சிறந்த காவல்காரர் யார் என்பதைத் தேர்வு செய்வதற்காக போட்டி ஒன்று நடத்தப்பட்டது. அதில் உலகின் பெயர்பெற்ற அனைத்து நாட்டு காவலர்களும் கலந்து கொண்டனர். முதல் சுற்றுப் போட்டியில் உலகின் தலைச்சிறந்த காவல்காரர்கள் என்று ஸ்காட்லாந்து, அமெரிக்கா மற்றும் இந்தியாவின் சார்பில் தமிழ்நாடு காவலர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
இரண்டாம் கட்டப் போட்டியில் ஒரு சிங்கத்தைக் காட்டிற்குள் விட்டு விடுவது என்றும் காட்டிற்குள் இருந்து அந்த சிங்கத்தைக் கண்டுபிடித்துக் கொண்டு வரவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
போட்டி துவங்கியது.
முதலாவதாக ஸ்காட்லாந்து காவலர்கள் அந்த சிங்கத்தைக் கொண்டு வர அனுப்பப்பட்டனர். காட்டிற்குள் சென்ற அவர்கள் ஒரு மணி நேரத்திற்குள் அந்த சிங்கத்தைப் பிடித்துக் கொண்டு வந்தனர்.
அடுத்து அமெரிக்கக் காவலர்கள் காட்டிற்குள் சென்றனர். உள்ளே சென்ற அவர்கள் ஒரு நாள் முழுவதும் தேடி மறுநாள் அந்த சிங்கத்தைப் பிடித்துக் கொண்டு வந்தனர்.
கடைசியாக இந்தியாவின் சார்பில் தமிழ்நாடு காவலர்கள் காட்டிற்குள் கொண்டு சென்றனர். உள்ளே சென்ற காவலர்கள் ஒரு வாரமாகியும் வராததால் போட்டி ஏற்பாட்டாளர்கள் பயந்து போய் விட்டனர். காட்டிற்குள் அனுப்பப்பட்ட சிங்கம் தமிழ்நாடு காவலர்களை அடித்துக் கொன்று விட்டதோ என்கிற அச்சத்துடன் போட்டி ஏற்பாட்டாளர்கள் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொண்டு காட்டிற்குள் சென்றனர்.
அங்கே போட்டியாளர்கள் நினைத்தபடி விபரீதம் ஏதும் நடக்கவில்லை.
காட்டிற்குள் ஒரு மரத்தில் கரடி ஒன்று கட்டப்பட்டு இருந்தது. அந்தக்கரடியை தமிழ்நாடு காவலர்கள் அடித்துக் கொண்டே "உன்னைக் கரடி என்று சொல்லாதே... நீ கரடியில்லை... அங்கே வந்து நீ சிங்கம் என்று சொல்ல வேண்டும். நீதான் சிங்கம் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்." என்று அதைத் துன்புறுத்திக் கொண்டிருந்தனர்.
கரடியைக் கூட சிங்கம் என்று சொல்ல வைக்கும் தமிழ்நாடு காவலர்களின் செயலைப் பார்த்து போட்டியாளர்கள் அதிர்ந்து போய் விட்டனர்.