அந்த நாட்டு அரசனுக்கு ஒரு மனக்கவலை. அதை யாரிடமும் சொல்லமுடியாமல் குழப்பத்தோடு அமர்ந்திருந்தான்.
அரசனின் முகத்தைக் கவனித்த மந்திரிக்கு ஏதோ பிரச்னை என்று புரிந்துவிட்டது. ஆனால், வற்புறுத்திக் கேட்டால் அவர் தவறாக நினைத்துக் கொள்வாரோ என்ற பயம்.
ஆகவே மந்திரி ஒரு தந்திரம் செய்தார். “அரசே, நீங்கள் வேட்டைக்குப் போய் ரொம்ப நாளாகிவிட்டதே?” என்றார்.
“ஆமாம்” என்று சொன்ன அரசன், “ஆனால், இப்போது நான் வேட்டையாடும் மனநிலையில் இல்லை!” என்றான்.
“அரசே, மனம் சரியில்லாதபோதுதான் இதுபோன்ற உற்சாக விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும்” என்றார் மந்திரி.
“புறப்படுங்கள். காட்டுக்குள் போகிற வழியில்தானே உங்களுடைய குருநாதரின் ஆசிரமம்? அப்படியே அவரையும் தரிசித்துவிட்டுச் செல்லலாம்!”
“குரு” என்றவுடன் அரசனிடம் புதிய நம்பிக்கை பிறந்தது. மேலும் வேட்டைக்காக இல்லாவிட்டாலும் அவரைச் சந்தித்தால் தன்னுடைய குழப்பத்துக்கு ஒரு தெளிவு பிறக்கும் என்று நினைத்தான் அவன்.
அரசன் சென்றபோது, குருவும் அவருடைய சீடர்களும் அரசனை அன்போடு வரவேற்று உபசரித்தார்கள்.
அரசன் உபசரிப்புகளுக்குப் பின்பு தன் குருநாதரைத் தனியே சந்தித்தான். தனது குழப்பங்களை விவரித்தான். அவற்றைச் சரி செய்வது எப்படி என்று தான் யோசித்துவைத்திருந்த தீர்வுகளையும் சொன்னான். குருநாதர் எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.
கடைசியாக அரசன் அவரிடம், “குருவே, நீங்கள் இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” கேட்டான்.
அவர் எதுவும் பதில் பேசவில்லை. சில நிமிடங்களுக்குப்பிறகு “நீ புறப்படலாம்” என்றார்.
அரசன் முகத்தில் கோபமோ, ஏமாற்றமோ இல்லை. உற்சாகமாகக் கிளம்பிச் சென்று தன் குதிரையில் ஏறிக்கொண்டான். நாலு கால் பாய்ச்சலில் காட்டை நோக்கிப் பயணமானான்.
இதைப் பார்த்த மந்திரி குருநாதரிடம் சென்று, “அரசருடைய பிரச்னையை எப்படித் தீர்த்து வைத்தீர்கள் குருவே?” என்று ஆர்வத்தோடு கேட்டார்.
“உன் அரசன் புத்திசாலி. அவனே தன் பிரச்னையைத் தீர்த்துக்கொண்டான்” என்றார் அந்தக்குரு.
மந்திரி ஒன்றும் புரியாமல் அவரைப் பார்த்தார்.
“நான் செய்ததெல்லாம், அவன் தன்னுடைய குழப்பங்களைச் சொல்லச் சொல்லப் பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்டேன். சாய்ந்து அழத் துணை செய்து என் தோளைக் கொடுத்தேன்” என்றார் குரு.