ஒரு நாள் இரண்டு தேவதைகளுக்கு சந்தேகம் வந்தது. இறைவனிடம் பலர் வந்து வேண்டிக் கொள்கின்றனர். அப்படி வேண்டிக் கொள்ளும் போது, “இறைவா... நான் தினமும் உன்னை வணங்குகிறேன்” என்று சொல்கின்றனர்… இதில் உண்மையான பக்தி உடையவர் யார் என்பது தான் அந்த சந்தேகம்.
அந்த இரு தேவைதைகளும் நேராக இறைவனிடம் சென்று தங்கள் சந்தேகத்தை கேட்டன.
அப்போது இறைவன், “தேவதைகளே! இந்த ஊரில் பலரையும் போய்ச் சந்தித்து யார் எனதுஉண்மையான பக்தன் என்பதை விசாரித்துத் தெரிந்து வாருங்கள்” என்றார்.
உடனே தேவதைகள் புறப்பட்டு பலரிடமும் சென்று விசாரித்தன.
ஒருவன், “நான் கோவிலுக்குப் போகாத நாளே இல்லை... தினமும் மூன்று வேளை கடவுளை வணங்குகிறேன்” என்றான்.
அடுத்தவன், “நான் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் மட்டும்தான் கோவிலுக்குப் போவேன்” என்றான்.
மற்றவன், “நான் வாரத்தில் ஒரு நாள்தான் கோவிலுக்குச் செல்லுவேன்” என்றான்.
இன்னொருவன்,“எனக்குக் கஷ்டம் வரும் சமயத்தில் மட்டும் கோயிலுக்குச் சென்று கடவுளிடம் வேண்டுவேன்” என்றான்.
இப்படியாக பலரும் ஏதோ ஒரு சமயத்தில் கடவுளை நினைப்பவராகவே இருந்தனர். இதில் யார் உண்மையான பக்தன் என்று எப்படி கண்டுபிடிப்பது என்ற குழப்பம் இரு தேவதைகளுக்கும் ஏற்பட்டது.
அப்போது அந்தவழியே அவசரமாகச் சென்று கொண்டிருந்த ஒருவனை நிறுத்தி, “ஐயா, உங்களுக்குக் கடவுள் பக்தி உண்டா? நீங்கள் எப்போது கடவுளை வழிபடுவீர்கள்?” என்று ஒரு தேவதை கேட்டது.
அதற்கு அவன், “எனக்குக் கடவுளை நினைக்கவே நேரமில்லை, அவசரமாகச் சிலருக்கு உதவி செய்ய வேண்டியிருக்கிறது. நான் செல்கிறேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.
தேவதைகள் கடவுளிடம் திரும்பி வந்து நடந்ததை அப்படியே சொல்லின.
எல்லாவற்றையும் கேட்ட கடவுள் அமைதியாக இருந்தார்.
இரண்டு தேவதைகளும், “இறைவனே... உண்மையான பக்தன் யார் என்று நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்களா?” என்று கேட்டன.
“கண்டுபிடித்துவிட்டேன்!” என்றார் கடவுள்.
இரண்டு தேவதைகளும் “யார் அவர்?தினமும் மூன்று வேளையும் கோவிலுக்கு வருபவர்தானே?” என்றன.
கடவுள், “இல்லை... இல்லை... நீங்கள் கடைசியாகச் சந்தித்த என்னை நினைக்கக்கூட நேரமில்லாது ஏழைகளுக்குச் சேவை செய்ய வேண்டுமென்று ஓடினானே... உண்மையில் அவன்தான் எனது பக்தன்” என்றார்.
அப்போதுதான் உண்மையான பக்தி எதுவென்பது அந்தத் தேவதைகளுக்குப் புரிந்தது.