அரசர் ஓய்வுக்காகக் காட்டுக்குச் சென்றபோது தனது செல்ல நாயையும் அழைத்துப் போனார். அவர் வேட்டையில் மும்முரமாக இருக்க, அங்குமிங்குமாக பாய்ந்து பாய்ந்து காட்டின் வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தது நாய். பல நிமிடங்களுக்குப் பிறகுதான் தான் வழியைத் தவறவிட்டு விட்டதை உணர்ந்தது.
அப்போது சற்று தூரத்தில் புலி ஒன்று வருவதைக் கண்டது நாய். அது தன்னை வேட்டையாடத்தான் வருகிறது என்பதையும் உணர்ந்தது. தப்பிப்பது எப்படி? என்று எண்ணியபோது எதிரில் சில எலும்புத் துண்டுகளைக் கண்டது. உடனே அந்த நாய், புலிக்கு முதுகு காட்டிய வண்ணம் எலும்புத் துண்டுகளின் முன் அமர்ந்தது.
புலி அருகில் வந்தவுடன் "இந்தப்புலியின் மாமிசம் எவ்வளவு சுவை? இன்னும் ஒரு புலி கிடைத்தால் நன்றாக இருக்குமே...!" என்றது.
இதைக் கேட்ட புலிக்குப் பயம் தொற்றிக் கொண்டது. “நல்ல வேளை இந்த மிருகத்திடமிருந்து தப்பினோம்” என்றெண்ணி மெதுவாகப் பதுங்கிப் பின்வாங்கியது.
இந்தச் சம்பவத்தை மரத்தின் மேலமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த குரங்கு ஒன்று, இந்த நாயைக் காட்டிக் கொடுத்து, புலியிடமிருந்து தனக்குப் பாதுகாப்பு தேடிக் கொள்ளலாம் என்றெண்ணி, புலி சென்ற திசையை நோக்கி விரைந்தது.
இதைப் பார்த்த நாய் ஏதோ விவகாரம் எனப் புரிந்து கொண்டதுடன் இனி புலியிடமிருந்து ஓடித் தப்பமுடியாது என்பதையும் உணர்ந்து கொண்டது.
குரங்கு புலியிடம் நாயின் தந்திரத்தைக் கூறியதும் கோபம் கொண்ட புலி, "என்னுடன் வந்து அந்த நாய் என்ன பாடுபடுகிறது என்பதைப் பார்" என்று கத்தியபடி குரங்கினைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டு நாய் இருந்த இடம் நோக்கி விரைந்து வந்தது.
குரங்கும் புலியும் சேர்ந்து வருவதைக் கண்ட நாய், பழைய இடத்தில் அமர்ந்தபடியே அவற்றைப் பார்க்காதது போல இருந்து கொண்டு, "இன்னொரு புலியைக் கொண்டு வருவதாகச் சொல்லிப் போன அந்தக்குரங்கை இன்னும் காணோமே..." என்றது சத்தமாக.
இதைக் கேட்ட புலி குரங்கை அப்படியே அடித்துக் கொன்று தின்றது.