தன் சகோதரர்கள்(கெளரவர்கள்) மேல், கொடிய அஸ்திரங்களைப் பிரயோகிக்க மனமின்றி, சற்று மயக்கமுறச்செய்யும் பாசுபத அஸ்திரத்தை தேடிக்கொண்டு வர கிளம்பினான் அர்ச்சுனன்.
போகிற வழியில் அனுமன் தவம் செய்து கொண்டிருப்பதைக் கண்டார்.
அவரிடம் நக்கலாக, "உங்கள் இராமர் பெரிய வில்லாளி ஆயிற்றே. தான் ஒரே ஆளாக அம்பெய்தே ஒரு பலமான பாலம் கட்டமுடியுமே... ஏன் குரங்குப் படையை வைத்து கற்களால் கட்டினார்?" என்றான்.
அர்ச்சுனின் கர்வத்தை அடக்க வேண்டும் என்ற கோபம் அனுமனுக்கு உண்டாயிற்று.
"அம்பாலான பலமான பாலத்தை இப்பொழுதே கட்டுக. என் கால் சுண்டுவிரல் பட்டதும் அது சுக்குநூறாகும்" என்றார் அனுமன்.
அர்ச்சுனனும் விடவில்லை. "அப்படி மட்டும் நடந்தால், இங்கேயே வேள்வி ஏற்படுத்தி அதில் என்னை மாய்த்துக் கொள்வேன்" என சூளுரைத்தார்.
"நானும் சொல்கிறேன். அவ்வாறின்றி நான் தோற்றால் உமது போர்க்கொடியில் இருந்து கொண்டு, என் வாழ்நாள் முழுவதும் உமக்கு அடிமையாக இருப்பேன்" என்றார் அனுமன்.
உடனே, நாணில் அம்புகள் பூட்டி எய்து, ஒரு பாலம் உருவாக்கினார் அர்ச்சுனன். எத்தனை கோடி பேரையும் தாங்கும் பலமான பாலமாக அது இருந்தது.
அனுமன் "ஜெய்ராம்" என்று இராமனைத் தியானித்ததும் அவர் உருவம் வளரத் தொடங்கியது... பெரும் உருவம் கொண்ட அனுமன் பாலத்தின் மீது கால் வைத்தார்.
அனுமனின் கால்பட்டதும் பாலம் சுக்குநூறாகிப் போனது...
அனுமன் வெற்றிக்களிப்பில் ஆடினார். ஒடினார். கூக்குரலிட்டார்..
அர்ச்சுனனுக்கு அதிர்ச்சி... தமது வில் திறமை பொய்த்து விட்டதே என்ற துக்கம் தாங்க முடியவில்லை. வேறுவழியின்றி வேள்வி வளர்க்கத் தொடங்கினார்.
"வந்த நோக்கத்தை விட்டுவிட்டு, ஓர் அற்பக்குரங்கிடம் பந்தயம் கட்டி உயிரை விடப் போகின்றேனே... என் அண்ணனின் நிலையையும், என் கடமையையும் மறந்து, கர்வத்தால் மதிமயங்கிப் போனேனே. கண்ணா, என் இறைவா என்ன செய்யப் போகிறேன்" என்று கலங்கினார்.
வேள்வித்தீக்குள் அர்ச்சுனன் குதிக்க முற்பட்டபோது, "என்ன பிரச்சினை இங்கே?" என்றொரு குரல் கேட்டது.
பார்த்தால் ஒரு அந்தணன் நின்று கொண்டிருந்தான்.
அவர்களுக்கிடையிலான பந்தயத்தைப் பற்றி சொன்னார் அர்ச்சுனன்.
"பந்தயம் என்றாலே நடுவர் ஒருவர் வேண்டும். நடுவர் இன்றி நீ எப்படி தோற்றதாக கருதப்படும்? இப்பொழுது நான் நடுவராக இருக்கிறேன். உங்கள் போட்டியை மீண்டும் தொடங்குங்கள்"
போட்டி மீண்டும் தொடங்கியது.
தனக்கு கிடைத்த மறுவாய்ப்பை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தார் அர்ச்சுனன். கண்ணனை தியானித்துக் கொண்டே மீண்டும் அம்பெய்து ஒரு பலமான பாலம் கட்டினார்.
அனுமன் கவலையே படவில்லை. தன் பலம்பற்றி தனக்கே தெரியாத சாபம் பெற்றிருந்த அனுமனுக்கு தன் வல்லமை புரிந்தவுடன் கர்வம் வந்திருந்தது...
"இதோ பார்...உன் பாலம் எப்படி நொறுங்கப் போகிறது பார்" என்றபடி பாலத்தின் மீது ஏறி நின்றார்...ஆடினார்...ஓடினார்...குதித்தார்...பாலம் மட்டும் அப்படியே இருந்தது...ஒன்றும் ஆகவில்லை.
"பார்த்தாயா என் மாமனின் (கண்ணன்) சக்தியை? உங்கள் இராமரால் உம்மைக் காப்பாற்ற முடியவில்லையே" என்று கேலிசெய்தார் அர்ச்சுனன்.
"நிறுத்துக உமது கொக்கரித்தலை. எங்கள் இராமரைவிட உன் கண்ணன் அவ்வளவு பெருமைக்குரியவன் இல்லை"
"யார் பெரியவர் என்று நான் சொல்கிறேன்", என்ற அந்தணரின் குரலைக் கேட்டுத் திரும்பினால், அங்கே விஷ்ணு நின்று கொண்டிருந்தார்.
"கர்வம் தோன்றும் போது நம் கடமையும் பொறுப்புகளும் மறந்து விடுகின்றன...ஒரே பரம்பொருளின் இரு அவதாரங்கள்தான் இராமனும், கண்ணனும்...அப்படியிருக்க இதில் யார் பெரியவன் என்பது அர்த்தமற்ற விவாதம். இருவருடைய பக்தியும் அளவு கடந்தது, சந்தேகமேயில்லை. ஆனால், இறைவன் ஒருவனே என்பதை உணர மறந்து விட்டீர்கள்" என்றார் விஷ்ணு.
இருவரும் நெகிழ்ந்து போய் நின்றார்கள்.
அனுமன் தான் சொன்னபடி அர்ச்சுனன் போர்க்கொடியில் இருந்து கொண்டு தன் வாழ்நாள் மட்டும் சேவை செய்தார்.