மீனின் விபரீத ஆசை!
ஆறு ஒன்றில் மீன் ஒன்று உல்லாசமாக நீந்திக் கொண்டிருந்தது. அப்போது கரையில் பிற உயிரினங்கள் சுற்றி திரிவதைப் பார்த்தது.
உடனே அதற்கு ஒரு விபரீத ஆசை தோன்றியது.
நாமும் கரைக்கு சென்று வாழ்ந்தால் என்ன? எத்தனை காலம்தான் இந்த நீரிலேயே சுற்றிச்சுற்றி வருவது? இந்த இடம் போரடித்து போய்விட்டது. ஒருமுறை கரைக்கு சென்று அங்கேயே வாழ்ந்தால் என்ன என்று எண்ணியது.
பாவம் அந்த அப்பாவி மீனுக்குக் கரைக்குச் சென்றால் சுவாசிக்க முடியாமல் இறந்து போவோம் என்பது தெரியவில்லை! அது மெல்லக் கரையோரமாக வந்து மணல் மேட்டில் குதித்தது.
அவ்வளவுதான்! சில நொடிகளில் அது சுவாசிக்க முடியாமல் தவித்துத் துடித்தது.
அப்போது அதனருகே ஒரு சிறுவன் வந்தான். முட்டாள் மீனே! நீ ஏன் கரைக்கு வந்தாய்? இங்கு உன்னால் உயிர் வாழ முடியாது. வீணாகத் தரைக்கு வந்து இறக்காதே! என்று சொல்லி மீண்டும் ஆற்றில் எடுத்து வீசினான்.
அப்பொழுதுதான் அந்த மீனுக்கு உயிர் வந்தது.
அது தன் நிலையை உணர்ந்தது. அவரவர் இருக்குமிடம் அவரவர்க்கு சிறப்பு என்று தெளிந்தது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.