பழி நம் மேல விழுந்திடுச்சு!
ஒரு தம்பதிக்கு இரண்டு குறும்புக்கார மகன்கள் இருந்தனர். அவர்களை நல்வழிப்படுத்தப் பெற்றோர் செய்த முயற்சி எதுவும் பலனளிக்கவில்லை.
அந்த ஊருக்குப் புதிதாக ஒரு சாமியார் வந்திருந்தார். அவரிடம் தங்கள் மகன்களை திருத்த என்ன செய்யலாம்? என்று கேட்டு வரலாமென்று முடிவு செய்து இளையவனை அவரிடம் அழைத்துச் சென்றனர்.
சாமியார் “இளையவன் இங்கு ஒருநாள் இருக்கட்டும். அவனை இங்கு விட்டுச் செல்லுங்கள். மாலையில் வந்து கூட்டிச் செல்லுங்கள்” என்று கூறினார்.
பெற்றொரும் அவனை அங்கே விட்டுவிட்டு வீடு திரும்பினார்.
சாமியார் அந்தச் சிறுவனிடம் மெதுவாக, "கடவுள் எங்கே?" என்று கேட்டார்.
சிறுவன் முகத்தில் சிறிது பயம் கலந்த அதிர்ச்சி. பதில் இல்லை.
புரியவில்லையோ என்று நினைத்து அதே கேள்வியை இன்னும் சற்று அழுத்தமாக கேட்டார் சாமியார்.
சிறுவன் முகத்தில் அதிர்ச்சி அதிகமானது. இன்னும் அதிக பலமாக மூன்றாம் முறை வந்த கேள்வியில் துள்ளிக் குதித்த சிறுவன், வேகமாக வீட்டை நோக்கி ஓடினான். வீட்டிற்குள் சென்ற அவன் ஒரு அறையினுள் ஒளிந்துகொண்டான்.
இதைக்கண்ட அவனது மூத்த சகோதரன் அவனிடம், "என்ன ஆச்சு? ஏன் ஒளிந்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டான்.
அவன் கவலையுடன், "இரண்டு பேரும் நல்லா மாட்டிக்கிட்டோம். அந்த சாமியார் கடவுளை காணோமாம், பழி நம்ம மேல விழுந்திடுச்சு” என்றான்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.