புத்திசாலிக் கிளி
ஆப்பிரிக்கக் கிளி ஒன்றைக் கூண்டினுள் வைத்து ஒருவர் வளர்த்து வந்தார். ஒரு முறை அவர் ஆப்பிரிக்கா செல்லும் போது கிளி, “என் ஜோடிக்கிளி அங்கிருக்கும். அதனிடம் நான் இங்கு கூண்டில் அடைபட்டிருப்பதாகச் சொல்லுங்கள்” என்றது.
அவரும் தன் வேலை முடிந்த பின் காட்டில் தனியாக இருந்த அந்தக் கிளியைக் கண்டு விபரத்தை சொன்னார். அது உடனே கண்ணீர் வடித்துக் கீழே சுருண்டு விழுந்து விட்டது.
“அடடா, இந்தக் கிளி இறந்ததற்கு நாம் காரணமாகிவிட்டோமே” என்று வருத்தப்பட்டு ஊருக்கு வந்து கூண்டுக் கிளியிடம் விபரத்தைச் சொன்னார்.
இதைக் கேட்ட அந்தக்கிளியும் கண்ணீர் வடித்துக் கூண்டினுள்ளேயே விழுந்து விட்டது.
“நம்மால் இந்தக் கிளியும் அநியாயமாய் இறந்து போய்விட்டதே” என்ற வருத்தத்துடன் கூண்டைத் திறந்தார்.
உடனே அந்தக் கிளி அங்கிருந்து வெளியேறீ பறந்து போய் பக்கத்திலிருந்த மரக்கிளையில் அமர்ந்தது. உடனே அவர், “உன் ஜோடிக்கிளி இறந்தது தெரிந்தும் நீ என்னிடம் நடித்துத் தப்பி விட்டாயே!”என்றார்.
அதற்கு அக்கிளி, “என் ஜோடிக் கிளியும் இறக்கவில்லை. கூண்டில் அடைபட்ட நான் தப்பிக்கும் வழியை உங்களிடமே அது சொல்லி அனுப்பியிருக்கிறது” என்று கூறி விட்டுத் தன் ஜோடிக்கிளியைத் தேடிப் பறந்து சென்றது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.