தான் மட்டும்தான் என்கிற கர்வம்
பாண்டவர்களின் பட்டத்து ராணியான திரௌபதி சிறந்த கிருஷ்ண பக்தை. அவள் கிருஷ்ணரைப் பூஜித்து வந்தாள். கிருஷ்ணரும் அவளின் பக்திக்குக் கட்டுப்பட்டு இருந்தார். ஆனால் திரௌபதிக்கு கிருஷ்ணரின் மேல் கொண்டிருந்த பக்தியில் கர்வம் ஏற்பட்டது. அதாவது கிருஷ்ணர் அவளுடைய பக்தியை அதிகமாக நேசிப்பதாகவும், அவளும் கிருஷ்ணரை அதிகமான பக்தியில் வைத்திருப்பதாகவும் நினைத்துக் கொண்டாள்.
இந்தக் கர்வத்தை அவளிடமிருந்து அகற்ற வேண்டுமென்று விரும்பினார் பகவான் கிருஷ்ணர்.
ஒரு நாள் திரௌபதிக்கு சுடுநீரில் குளிக்க வேண்டுமென்று தோன்றியது. ஆகவே தன் பணிப்பெண்களிடம் நீரைச் சுடவைக்கும்படி கூறினாள். நெருப்பு போட்டு சுட வைத்தாள் பணிப்பெண். வெகுநேரமாகியும் நீர் சூடாகவேயில்லை. இதைப் பார்த்த பீமன் தண்ணீரைச் சுடவைக்க அங்கிருந்த காட்டில் பாதியை வெட்டிக் கொடுத்து விட்டான். அத்தனை விறகும் எரிக்கப்பட்ட பின்பும் தண்ணீர் மட்டும் சூடாகவே இல்லை.
இதைப் பார்த்த திரௌபதி கிருஷ்ணரை நினைத்துப் பிரார்த்தனை செய்தாள்.
இந்த தண்ணீர் இவ்வளவு விறகுகளை எரித்தும் சூடாகாமல் இருக்கிறதே என்று கேட்டாள்.
அதற்கு கிருஷ்ணர், "நீ சூடுபடுத்த வேண்டுமென்று தண்ணீர் ஊற்றிய பாத்திரத்தில் ஒரு தவளை இருக்கிறது. அது என்னை நோக்கி தண்ணீரைச் சூடாகாமல் பார்த்துக் கொள்ளவேண்டிய பொறுப்பு உன்னுடையது என்று பக்தியோடு என்னை வேண்டிக் கொண்டது. என்னுடைய படைப்புகள் என்னை நோக்கி அபயக் குரலிடும் போது அவற்றையும் காக்க வேண்டிய கடமை என்னுடையதாகி விடுகிறது. எனவே நான் அந்தத் தண்ணீர் சூடாகாமல் இருக்கச் செய்தேன்." என்றார்.
அப்பொழுதுதான் திரௌபதிக்கு தான் மட்டும்தான் கிருஷ்ணரிடம் அதிக பக்தியோடு இருக்கிறோம் என்கிற கர்வம் நீங்கியது. இதற்காக கிருஷ்ணரிடம் மன்னிப்பும் கேட்டாள்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.