ஒரு ஊரில் வாழ்ந்த பணக்காரன் ஒருவனுக்குத் திடீரென்று ஒரு சந்தேகம் எழுந்தது. நம் ஊரில் வாழும் ஏழை, பணக்காரன் மற்றும் இரண்டிற்கும் இடையில் உள்ள நடுத்தரமானவர்கள் எனும் இம்மூன்று பிரிவினர்களில் யார் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்பினான்.
இதற்காக அவன் மனதில் ஒரு எண்ணம் வந்தது. இரவு மக்கள் தூங்குவதை வைத்து நாம் ஒரு முடிவுக்கும் வரலாம் என்று நினைத்தான்.
அன்றிரவு அவன் அந்த ஊரைச் சுற்றி பார்த்தான். முதலில் பணக்காரர்கள் குடியிருக்கும் பகுதிக்குச் சென்றான் அங்கு அவர்கள் மாளிகைகள் விளக்கொளியில் மின்னியது . அங்கு வீட்டில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த ஊதுபத்தி வாசனை தெருவரைக்கும் வீசியது.மற்றும் விருந்து உணவு சமைக்கும் வாடை கமகமத்தது உடன் நாட்டியம் இசை யென கலைகட்டியது.
அடுத்து நடுத்தர மக்கள் வாழும் பகுதிக்குச் சென்றான். அங்கு வீடுகள் மிகப்பெரிய அளவில் இல்லாமல் சற்று நடுத்தரமான அளவில் இருந்தன. ஓரிரு தீபங்கள் ஏற்றப்பட்டு, சற்று ஆரவாரம் குறைந்து காணப்பட்டது. இவற்றைப் பார்த்த அவன் அடுத்த பகுதிக்குச் சென்றான்.
மூன்றாவதாக ஏழைகள் வசிக்கும் பகுதிக்குச் சென்றான். அங்கு வீடுகள் பனை மற்றும் தென்னை ஓலைகளால் வேயப்பட்ட பல வீடுகள் இருந்தன. அவர்கள் மிகவும் எளிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர்.
மூன்று பகுதிகளுக்கும் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த அவன், அங்கு வழியில் ஒரு மரத்தடியில் ஒரு துறவி அமர்ந்திருப்பதைக் கண்டான்.
அந்த துறவியைப் பார்த்து வணங்கிய அவன், தனக்கு வந்த சந்தேகத்தைக் கூறி, இதற்காகத் தான் மூன்று பகுதிகளுக்கும் சென்று, அங்கு கண்ட காட்சியையும் கூறினான். என்னுடைய சந்தேகத்திற்குத் தாங்கள்தான் தகுந்த விளக்கம் தரவேண்டும் என்றான்.
துறவி அவனிடம், “ஐயா, முதலில் நீ எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும். அதன் பின்புதான் நான் இதுகுறித்து விளக்கமளிக்க முடியும்” என்றார்.
அவனும், “நான் உங்களுக்கு உதவி செய்கிறேன். எனக்கு என்னுடைய சந்தேகத்தைத் தீர்த்து வைத்தால் போதும்” என்றான்.
துறவி தன் பையில் வைத்திருந்த ஒரு கைப்பையை எடுத்துக் கொடுத்து, “இதில் ஐந்து கைப்பிடி மண்ணை நான் நிரப்ப வேண்டும். இதற்கு நீ இந்தப் பையைப் பிடித்துக் கொண்டிருந்தால் போதும்...” என்று சொன்னார்.
அவன், “இவ்வளவுதானா, அந்தப் பையைக் கொடுங்கள்” என்றபடி வாங்கிக் கொண்டான்.
துறவி ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து அந்தப்பைக்குள் போட்டார். அந்தப் பையில் பாதி நிரம்பியது. அடுத்த கைப்பிடி மண்ணைப் போட, அந்தப்பை நிரம்பியது. மூன்றாவதாக ஒரு கைப்பிடி மண்ணை அந்தப் பையில் நிரப்பினார். அது கீழே கொட்டியது. அடுத்து நான்காவது கை மண்ணையும் பையில் போட முயன்றார் மண் கீழே சிந்தியது.
இதைக் கன்னட அவன் துறவியை பார்த்து, “பை தான் நிரம்பிவிட்டதே... அப்புறம் ஏன் மீண்டும் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டு நேரத்தை வீணாக்குகிறீர்கள்” என்றான்.
துறவி சிரித்தபடியே சொன்னார், “உன்னுடைய சந்தேகத்துக்கு இதுதான் பதில். நீயே ஒன்றை மனதில் இதுதான் என்று நினைத்துக்கொண்டு என்னிடம் வந்து பதில் கேட்பது எப்படி ஏற்புடையதாக இருக்கும். சிலரிடம் கலந்து ஆலோசனை செய்து விட்டு முடிவுசெய்தால் சிறப்பானதாக இருக்கும். ஆனால் அதைவிட்டுவிட்டு நீயே ஒரு கருத்தை மனதில் வைத்துக் கொண்டு மற்றவரிடம் நீ யூகித்து வைத்தது சரியென்ற மனநிலையில் பிறரிடம் நீ கேட்கும் கேள்விக்கு அவர்கள் எப்படி பதில் சொல்ல முடியும்?”என்றார்.
அவனுக்கு அவனது தவறு புரிந்தது. “ஆமாம் ஐயா, உங்கள் கருத்து முற்றிலும் உண்மை. நானாக ஒரு சந்தேகத்தை எழுப்பிக் கொண்டு, நானாகவே இப்படித்தான் இருக்கும் என்று முடிவு செய்து மூன்று பகுதிக்கும் சென்றது தவறுதான். என் சந்தேகத்தைத் தீர்த்து வையுங்கள்” என்றான்.
உடனே துறவி, “நீ மக்களை மூன்று வகையாகப் பிரித்துப் பார்க்காதே. அனைவரும் ஒன்று தான். பணக்காரன் மேலும் பணத்தைச் சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறான். ஏழை, பணம் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான். இரண்டிற்கும் இடையில் உள்ளவன் தான் தாழ்ந்துவிடக்கூடாது மேலும் அதிகப் பணம் சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறான். மூவரும் பணம் சேர்க்கும் ஆசையுடனே இருக்கிறார்கள். இவர்களில் சிலர் இந்த ஆசையில்லாமல் இருப்பது போதுமென்று வாழ்கிறார்கள், அவர்கள்தான் மகிழ்ச்சியானவர்கள்” என்றார்.