துறவி ஒருவர் காட்டு வழியே நடந்து வந்து கொண்டிருந்தார். அவருக்கு களைப்பு அதிகமாக இருக்க அந்தக் காட்டிலேயே படுத்து விட்டார். தனது கைகளைத் தலைக்குத் தலையணை போல் வைத்துக் கொண்டார்.
அந்தக் காட்டின் வழியே இரண்டு பெண்கள் வந்தார்கள்.
அவர்களில் ஒருத்தி, "இங்கே பார் இந்தக் காட்டில் வெறும் கோவணத்துடன் ஒருவர் படுத்திருக்கிறார். இவர் முற்றும் துறந்த துறவியாகத்தான் இருக்க வேண்டும்." என்றாள்.
" இவள் துறவியே இல்லை. துறவி வேடத்தில் இருப்பவர்" என்றாள் மற்றவள்.
இதைக் கேட்டு திடுக்கிட்ட துறவி படுத்தபடியே அடுத்து என்ன பேசுகிறார்கள்? என்று கவனிக்கத் துவங்கினார்.
"அவள் உணமையான துறவி இல்லை என்று எதை வைத்துச் சொல்கிறாய்?"
"கைகளைத் தலையணை போல் வைத்துப் படுத்திருக்கிறாரே. உடல் இன்பம் இன்னும் அவரை விட்டு நீங்கவில்லை. அதனால்தான் சொல்கிறேன்."
துறவிக்கும் இரண்டாமவள் சொன்னது சரியென்று பட்டதால் தன் தலைக்கு வைத்திருந்த கைகளை எடுத்துவிட்டு அங்கேயே படுத்துக் கிடந்தார்.
சிறிது நேரம் கழித்து அதே பெண்கள் தங்கள் வேலையை முடித்து விட்டு அந்த வழியிலேயே திரும்பி வந்தார்கள்.
"தற்போது பார்த்தாயா? தலைக்குத் தலையணை போல் வைத்திருந்த கையை எடுத்துப் படுத்திருக்கிறார். இப்போதாவது இவரை துறவி என்று ஏற்றுக் கொள்கிறாயா? என்று கேட்டாள்.
"இப்போது அவரைத் துறவியாக ஏற்றுக் கொள்ள முடியாது"
"ஏன்?"
"உண்மையான துறவியர் பிறர் தங்களைப் புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால் இவரோ நாம் பேசிக் கொண்டதைக் கேட்டுத் தம்மைத் திருத்திக் கொண்டார். இப்பொழுதும் நாம் அவரைப் புகழ்ந்து பேசுகிறோமா? என்று கவனிக்க்கிறார். இவரைத் துறவி என்று எப்படி சொல்வது?"