கோழைக்குத் துணிவு வருமா...?
காட்டில் கொம்புள்ள கலைமான் ஒன்று இருந்தது. ஒரு நாள் அது அழகான குட்டி ஒன்றை ஈன்றது. பிறந்த அந்தக் குட்டியைக் கண்ணும் கருத்துமாக கொடிய மிருகங்களிடம் இருந்து மிகவும் பாதுகாப்பாக வளர்த்து வந்தது.
பயமறியாது துள்ளித்திரிந்த அந்தக் குட்டிமானுக்குத் தினசரி சிங்கம், புலி போன்ற கொடிய மிருகங்களின் குணநலன்கள், அவை தாக்கும் முறை, அதில் இருந்து எப்படி ஓடித் தப்புவது.? எனபது போன்ற பாதுகாப்பு வழிமுறைகளையெல்லாம் சொல்லிக் கொடுத்தது அதன் தாய் மான்.
ஒரு நாள் ஓநாயிடம் இருந்து தப்புவது பற்றிய பேச்சு வந்தது.
அப்போது அந்தக் குட்டி மான் அம்மாவிடம், “அம்மா, உனக்கு நாயின் உடலை விடப் பெரிய உடல், அதை விட வேகமாய் ஓடுகிறாய், தலையில் நீளக் கொம்புகளும் உள்ளது. அப்புறம் ஏன் அதைக் கண்டு பயம்...?
தாய் மான், "மகனே நீ சொல்வதெல்லாம் சரிதான்... நான் ஓநாயை விட நீ சொன்ன அத்தனை தகுதியும் உடையவன் தான்... ஆனால் ஒற்றை ஓநாய் குரைத்தாலும் குலை நடுங்கி ஓடும் குணமும் என்னிடம் இருக்கிறதே... அது எப்படி மாறும்...?” என்றது.
எத்தனை தகுதிகள் இருந்தாலும் கோழைக்கு மட்டும் துணிவு என்பது வரவே வராது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.