போரின் போது இரண்டு நண்பர்கள் களத்தில் இருந்தனர்.எதிரிகள் சுற்றி வளைத்துச் சுடும்போது ஒருவன் மட்டும் குண்டடி பட்டு விழுந்து கிடந்தான்.
நான் என் நண்பனை எப்படியாவது தூக்கி வந்து விடுகிறேன் எனக்கு உத்தரவு கொடுங்கள் என்று அங்கிருந்த அதிகாரியிடம் கேட்டான் அவன் நண்பன்.
“இந்நிலையில் மறைந்து இருந்து தாக்குவது தான் நமக்குச் சரியான வழி, நீ அங்கு போவதால் உன் உயிருக்குத்தான் ஆபத்து” என்றார் அந்த அதிகாரி.
அவன் பேசாமல் அந்த அதிகாரியைப் பார்த்தபடி, அவரின் அனுமதியை எதிர்நோக்கி நின்றான்.
“சரி, நீ போவது என்றால் போ... நீ போவதால் எதுவும் நடந்துவிடப் போவதில்லை...” என்று அந்த அதிகாரி சொன்னார்.
இதைக் கேட்டதும் அவன் தன் நண்பனைக் காப்பாற்ற ஓடினான்.
ஓடிச் சென்ற அவன் நண்பனைத் தோளில் தூக்கிக் கொண்டு வந்தான். அப்போது எதிரிகள் சுட்டனர். இவனுக்கும் துப்பாக்கிச் சூடு பட்டது. உடலில் பல இடங்கள் காயமடைந்தன. இருப்பினும், அதையும் மீறி அவனைத் தூக்கி கொண்டு ஓடி வந்தான்.
அதிகாரி அவனைப் பரிசோதித்துப் பார்த்தார். அந்த நண்பன் இறந்து போய் இருந்தான்.
உடனே அந்த அதிகாரி, “நான் அப்போதே சொன்னேன், நீ அவனைக் காப்பாற்றப் போவதால் எந்தப் பயனும் இல்லை என்று... இப்போது பார் நீயும் உடல் முழுக்கக் காயம்பட்டு வந்திருக்கிறாய்...” என்றார்.
உடனே அவன், “ஐயா, நான் போனதுதான் சரி” என்றான்.
“என்ன சொல்கிறாய் நீ...? உன் நண்பன் இறந்து விட்டான். அவனைக் காப்பாற்றச் சென்ற நீயும் காயம்பட்டு வந்திருக்கிறாய்... இது எப்படி சரியாகும்...?” என்று கேட்டார் அந்த அதிகாரி.
“ஐயா. நான் அங்கு போகும்போது என் நண்பன் உயிருடன் தான் இருந்தான். அவன் நான் அங்கு சென்றவுடன், நண்பா, நீ என்னைக் காப்பாற்ற வருவாய் என்று எனக்குத் தெரியும் என்று சொல்லிவிட்டுத்தான் இறந்தான். என் நண்பனின் அந்த ஒரு வார்த்தை எனக்குப் போதும் ... இந்தக் காயங்கள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை... இவை விரைவில் ஆறிவிடும்...” என்றான்.
அதிகாரி அவர்களின் நட்பின் அருமையை உணர்ந்து வியந்தார்.