ஆயிரம் யோசனை!
ஒரு காட்டில் நரியும் பூனையும் சந்தித்துக் கொண்டன.
நரி பூனையிடம் தன்னைப் பற்றிய பெருமைகளை அள்ளி விட்டது.
"பூனையே, நான் மிகுந்த தந்திரசாலி பகைவர்களிடம் இருந்து தப்பிக்க எனக்கு ஆயிரம் வழிகள் தெரியும்" அநேகமாக இதை நூலாக எழுதி அடுத்த மாதம் வெளியிடலாம் என்றிருக்கிறேன். சரி உனக்கு எத்தனை வழிகள் தெரியும் என்றது.
பூனை அலட்டிக் கொள்ளாமல், "நரியாரே உங்களைப் போல நான் பெரிய தந்திரசாலி இல்லை. எனக்கு ஆயிரம் வழிகள் தெரியாது. எனக்கு தெரிந்து ஒருவழி தான் அந்த ஒரு வழியை வைத்துத்தான் இதுவரை பல முறை தப்பித்துள்ளேன். அந்த ஒரு வழியைத் தவிர வேறு வழி எனக்கு சிறந்ததாகத் தெரியவில்லை" என்றது.
“அட முட்டாள் பூனையே, ஒரே ஒரு வழியை வைத்துக் கொண்டு எப்படிப் பகைவர்களிடம் இருந்து உயிர் பிழைப்பாய்...? ” என்று கேட்டது நரி.
இந்தக் கேள்வியை நரி கேட்ட போது வேட்டை நாய்களின் குரைக்கும் சப்தமும் அதன் பின்னே வேடர்கள் ஓடிவரும் சத்தமும் கேட்டது.
ஆபத்தைப் புரிந்து கொண்ட பூனை அருகில் இருந்த மரத்திற்கு தாவி வேகமாக உச்சிக்குச் சென்றது.
ஆயிரம் வழிகள் தெரிந்த நரி எந்த வழியை உபயோகிப்பது என்று குழம்பி... யோசனை வருவதற்குள் வேட்டை நாய்களால் சூழப்பட்டு வேடர்களிடம் பிடிபட்டது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.