அரசர் ஒரு நாள் நகர் வலம் போனார்.
வழியில் அரசரைக் காணுகிற மக்கள் எல்லாம் அரசருக்கு ஒரு மரியாதை கலந்த வணக்கம் தெரிவித்தனர்.
செல்லும் வழியில், சந்தையில் இருந்த கடை ஒன்றை பார்த்துக் கடைக்குள் நுழைந்தார் அந்த அரசர். அவருடன் அமைச்சர் மற்றும் சில வீரர்களும் உடன் சென்றனர்.
கடையிலிருந்த வயதானவர் அரசரை வரவேற்று, அவர் குடிப்பதற்குச் சிறிது கஞ்சியும் கொடுத்தார்.
அரசரும் வயதானவரின் அன்புக்கு அடிபணிந்து அந்தக் கஞ்சியைச் சிறிது கூட மிச்சம் வைக்காமல் வாங்கிக் குடித்தார்.
சிறுது கஞ்சியைக் குடித்த அரசரைப் பார்த்து அமைச்சர், “அரசே, ஆச்சரியமாக இருக்கிறதே... நீங்கள் இப்படி ஒரு நாளும் எந்த உணவும் உண்டதில்லையே” என வியப்புடன் கேட்டார்.
“ஆமாம் அமைச்சரே, இந்தக் கஞ்சி மிகவும் சுவையாக இருக்கிறது. நீண்ட காலத்துக்குப் பிறகு சுவையான ஒரு உணவினைச் சாப்பிட்டுள்ளேன்” என சொன்னார்.
பின் அரசர் வயோதிகரைப் பார்த்து, “முதியவரே, இந்தக் கஞ்சி மிகவும் சுவையாக இருக்கின்றதே... இதனை நீர் எப்படிச் செய்கின்றீர்?” எனக் கேட்டார்.
முதலில் என்னிடமுள்ள தங்கப்பாயை விரித்து, “கஞ்சிக்குத் தேவையான பொருட்களை எல்லாம் தயார் செய்து அப்பாயின் மீது வைத்து விட்டு அடுப்பினைத் தயார் செய்வேன், பின் என்னிடமுள்ள தங்கப்பானையை எடுத்து அதனை விறகுகள் நிறைந்த அடுப்பின் மேல் வைத்து தயார் செய்த அனைத்துப் பொருட்களையும் அதனுள் இட்டு நன்றாகப் பதமாகும் வரை அடுப்பினில் வைத்துவிடுவேன். பின் அடுப்பினில் இருந்து இறக்கிய கஞ்சியினை அதனை விற்பனைக்காகக் கொண்டு செல்லும் என்னுடைய மற்ற தங்கப்பானையினுள் இட்டு அதனை சந்தைக்குக் கொண்டு வருவேன். அதைத்தான் நீங்களும் இப்போது குடித்தீர்கள்” என்றார்.
அரசருக்கு மிகவும் வியப்பாக இருந்தது. “தங்கப்பொருள்கள் வைத்துக் கொண்டிருப்பவர் இப்படி கஞ்சி காய்ச்சி ஏன் விற்பனை செய்ய வேண்டும்?” என்று சிறு சந்தேகமும் எழுந்தது.
அரசர், “சரி, முதியவரே நான் உங்கள் வீட்டுக்கு வந்து நீங்கள் செய்வதைப் பார்க்க வேண்டும்” என்றார்.
“தாராளமாக, நீங்கள் வரலாம். உங்கள் காலடி இந்த ஏழையின் வீட்டில் படுவதற்கு மிகவும் பாக்கியம் பெற்றது” என்று கூறிஅழைத்துச் சென்றார்.
முதியவரும் கஞ்சியினை தயாரித்தார். ஆனால் முதியவர் கூறியது போன்று அங்கு தங்கப்பாயும், பானையும் போன்றவற்றைப் பயன்படுத்த வில்லை.
எல்லாம் சாதாரண பொருட்களாகவே காணப்பட்டது.
இதனைப் பார்த்த அரசருக்கு மிகவும் கோபம் வந்து விட்டது.
கோபத்தை அடக்கிக் கொண்ட அரசர் முதியவரிடம், “நீங்கள் கூறும் போது என்னிடம், தங்கப்பாய், தங்கப்பானை என்று சொன்னீர்கள். ஆனால் இங்கே எல்லாம் சாதாரணமாகவே இருக்கின்றதே” என்றார்.
இதனைக் கேட்ட முதியவர், “அரசரே நீங்கள் கேட்டது என்னுடைய தொழிலைப்பற்றி... என்னுடைய தொழில் எனக்கு மிகவும் உயர்ந்தது. அது மட்டுமல்லாமல் நான் தொழில் செய்ய பயன்படுத்தும் பொருட்களோ மிகவும் தகுதி வாய்ந்ததாக எனக்குத் தோன்றுகிறது. அதனால் அரசராகிய தங்களுக்கு ஏற்றபடி என் தொழிலைச் சிறிது உயர்த்திக் கூறினேன்” என்றார் அமைதியாக.
வயதானவர் சொன்னது அரசருக்கும் ஏற்புடையதாக இருந்தது.