இருபது ஆண்டுகள் கஷ்டம்...?
ஒரு வெளிநாட்டுத் துறவி இருபது ஆண்டுகள் கடினப்பயிற்சி எடுத்து நீரின் மீது நடந்து செல்லும் சக்தியான ஹடயோகத்தைக் கற்றுக் கொண்டார். அவரால் தரையில் நடப்பது போல சர்வ சாதாரணமாக தண்ணீரில் நடக்க முடிந்தது.
அவர் ஒரு முறை இந்தியாவுக்கு வந்தார்.
இந்தியாவில் ராமகிருஷ்ண பரமஹம்சரின் பெருமைகளைப் பற்றி கேள்விப்பட்டு அவரைச் சந்தித்தார்.
அந்தத் துறவி ராமகிருஷ்ணரிடம், "நான் இருபது ஆண்டுகள் கஷ்டப்பட்டுத் தண்ணீரில் நடக்கும் ஹடயோகத்தைக் கற்றுக் கொண்டேன். இந்த சக்தியால் இந்தியாவின் பெரிய நதியான கங்கை நதி மீது கூட நான் எளிதில் நடந்து போய் அக்கரையை அடைந்து விடுவேன்" என்றார்.
இதைக் கேட்ட ராமகிருஷ்ணர், “படகோட்டியிடம் சிறிது பணம் கொடுத்தால் உங்களை கங்கையின் ஒரு கரையிலிருந்து மறு கரைக்குக் கொண்டு சென்று விட்டு விடப்போகிறார். இதற்காக இருபது ஆண்டுகளை வீணடித்து விட்டீர்களே...” என்றார்.
இதைக் கேட்ட அந்தத்துறவி வெட்கித் தலை குனிந்தார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.