இளம் அதிகாரியின் சமயோசித அறிவு
பிரெஞ்சுப் புரட்சியின் போது ஒரு தெருவில் இராணுவத்தினர் செல்ல முடியாதபடி கூட்டம் அதிகமாக இருந்தது.
இதைக் கண்ட அப்படையின் தலைவன் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திக் கூட்டத்தைக் கலைக்கும்படி உத்தரவிட்டான்.
அப்படையிலிருந்து இளம் அதிகாரி ஒருவர் படைத்தலைவரிடம் போய், “முதலில் மக்களைக் கலைந்து போகும்படி சொல்வோம். அப்படியும் கலைந்து போகாவிட்டால் நீங்கள் சொல்வது போல் துப்பாக்கிச் சூடு நடத்தலாம். நான் வேண்டுமானால், மக்களைக் கலைந்து செல்லும்படி கேட்டுப் பார்க்கிறேன்” என்றார்.
படைத்தலைவனும் அதற்குச் சம்மதித்தான்.
அந்த இளம் அதிகாரி மக்கள் கூட்டத்தின் முன்பு முதலில் தன் தொப்பியைக் கழற்றி மரியாதை செய்தான்.
பின்னர், “இங்கு கூடியிருக்கும் நல்ல மனிதர்களுக்கு வணக்கம். நீங்கள் எல்லோரும் இங்கிருந்து கலைந்து செல்லும்படி உங்களை வேண்டுகிறேன். ஏனெனில், இங்குள்ள போக்கிரிகளைச் சுட்டுத் தள்ளும்படி எங்கள் படைத்தலைவர் ஆணையிட்டிருக்கிறார்” என்றார்.
அவ்வளவுதான் அங்கிருந்த கூட்டம் சிறிது நேரத்தில் கலைந்து சென்றது.
அந்த இளம் அதிகாரியின் சமயோசித அறிவால் துப்பாக்கிச் சூட்டில் பல உயிர்கள் பலியாவது தடுக்கப்பட்டது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.