ஒரு கோவில் அருகில் கண் தெரியாத சிறுவன் ஒருவன் பிச்சை எடுத்து கொண்டிருந்தான்.
அவன் அருகில் ஒரு பலகையில், “எனக்கு இரண்டு கண்களும் தெரியாது, தயவு செய்து எனக்கு ஏதாவது தருமம் செய்து உதவுங்கள்” என்று எழுதி வைத்திருந்தான்.
அந்த வழியில் போவோர் வருவோர் அதைப் பார்த்து கொண்டே சென்றார்கள். ஆனால், யாரும் அவனுக்குத் தருமம் ஏதும் செய்யவில்லை.
அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் தன்னுடைய பர்சில் இருந்து பணத்தை எடுத்து அவன் முன்பிருந்த தட்டில் போட்டார்.
பிறகு அங்கு வைத்து இருந்த பலகையில் ஒரு வாசகத்தை எழுதினார்.
அதன் பின்பு, “தம்பி, உனக்கு இதுவரை கிடைத்த தருமத்தை விட இனி அதிகம் கிடைக்கும். நான் இன்று மாலையில் வருகிறேன். உனக்கு இன்று கிடைக்கும் பணம் எவ்வளவு என்று பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
சிறிது நேரம் கழித்து, அந்தப் பலகையில் எழுதியிருந்தைப் பார்த்த பலரும் அவன் தட்டில் சில்லரையைப் போட ஆரம்பித்தனர்.
மாலை ஆனது. அந்த பலகையை எழுதி வைத்தவர் வந்தார்.
அவர் அந்தச் சிறுவனைப் பார்த்து, “தம்பி, இன்று உனக்கு மற்ற நாட்களை விட அதிக தருமம் கிடைத்ததா?” என்று கேட்டார்.
உடனே அந்தச் சிறுவன், “ஐயா, நீங்கள் சொன்னபடி இன்று எனக்கு தருமம் அதிகம் கிடைத்தது. எப்படி இது நடந்தது என்றுதான் தெரியவில்லை” என்றான்.
உடனே அவர், “தம்பி, நீ இங்குள்ள பலகையில் எழுதி வைத்ததை சிறிது மாற்றி எழுதினேன், அவ்வளவுதான்!” என்றார்.
சிறுவன், “பலகையில் என்ன எழுதினீர்கள் ஐயா?” என்று கேட்டான்.
“இன்றைய பொழுது நன்றாக விடிந்துள்ளது. ஆனால் என்னால் தான் அந்த அற்புதத்தை பார்க்க முடியவில்லை” என்று எழுதினேன் என்றார் அவர்.
“இந்த வாசகத்தைப் படித்தவர்கள் எனக்குத் தருமம் செய்வது எப்படி ஐயா?” என்று கேட்டான் அந்த சிறுவன்.
“இந்த வாசகத்தை படித்த அனைவரும் உனக்குக் கண் தெரியாது என்பதை விட, நல்ல வேளை! நமக்கு கண் இருக்கிறது நம்மால் எல்லாவற்றையும் கண்டு ரசிக்க முடிகின்றது என்று நினைப்பதுடன் உனக்குத் தருமம் செய்து விட்டு செல்கிறார்கள்” என்று சொன்னார்.