ஒரு ஊரில் மண்பாண்டம் செய்யும் குயவனும், வைரம் தீட்டுபவனும் அருகருகே வாழ்ந்து வந்தார்கள். இருவரும் தங்கள் தொழிலில் சிறந்தவர்களாக இருந்தனர். அவர்கள் செய்யும் பொருட்களை பல ஊர்களிலிலிருந்தும் மக்கள் வந்து வாங்கிச் சென்றனர்.
வைரம் தீட்டுபவன் ஒரு நாள் குயவனிடம், “எப்படி இருக்கிறாய்? உன் வேலை எப்படி இருக்கிறது?” என்று கேட்டான்.
குயவன் “அட போப்பா! எனக்குக் களிமண்ணில் வேலை... நாளெல்லாம் சகதியை மேலே அப்பிக் கொண்டு… கையெல்லாம் அழுக்காக்கிக் கொண்டு வேலை செய்ய வேண்டியிருக்கிறது. உன்னைப் போல சுத்தமாக இருக்கவா முடிகிறது? இந்தத் தொழிலின் மேல் எனக்கு வெறுப்பு தோன்றுகிறது...” என்று சொன்னான்.
அதற்கு வைர வியாபாரி, “நண்பனே, உனக்கு என் வேலையைப் பற்றி முழுமையாகத் தெரியாததால், என் வேலையைப் பெருமையாக நினைக்கிறாய். உனக்கு உன் கைகளும், கால்களும் அழுக்காகச் சுத்தமில்லாமல் இருந்தாலும், வேலை முடிந்ததும் குளித்தால் சுத்தமாகிவிடும். ஆனால், என் வேலையில் ஒவ்வொரு நாளும் வைரத்தைத் தீட்டும் போது பல என் கையை அறுத்துக் கொள்கிறேன். என் கைகளெல்லாம் ரத்த காயங்களாக ஆகிவிடுகின்றன. உன் வேலையில் இந்த ஆபத்தெல்லாம் கிடையாது. என் வேலையில் கையெல்லாம் புண்ணாகிப் போய் விடுகின்றன ” என்று அலுத்துக் கொண்டே புண்ணாகிப் போன தன் கைகளைக் காட்டினான்.
அப்படியா? உன் வேலையில் உனக்கும் மகிழ்ச்சி இல்லையா? அப்படியானால் மகிழ்ச்சியான வேலை எது? என்று குயவன் வைரம் தீட்டுபவனிடம் கேட்டான்.
வைரம் தீட்டுபவனுக்கும் யார் வேலையை மகிழ்ச்சியாகச் செய்கிறார்கள்? என்கிற சந்தேகம் வந்தது.
இருவரும் சிந்தித்தார்கள். அவர்களிருவருக்கும் எதுவும் தோன்றவில்லை.
அவர்களிருவரும் அந்த ஊரில் அனைவரும் மதித்து நடக்கும் சிந்தனையில் சிறந்த பெரியவரிடம் தங்கள் சந்தேகத்தைக் கேட்கச் சென்றனர்.
அவர்கள் இருவரும் அவரிடம் சென்று “ஐயா, எங்கள் வேலையில் மகிழ்ச்சியின்மையும், ஆபத்தும்தான் தெரிகிறது? எப்போதும் மகிழ்ச்சியாகச் செய்யக் கூடிய வேலை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்” என்று கேட்டனர்.
அந்தப் பெரியவர் அவர்களைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே, “உங்கள் இருவருக்கும் நீங்கள் செய்வதைத் தவிர வேறு வேலை ஏதாவது தெரியுமா?” என்று கேட்டார்.
அவர்களிருவரும், “தங்களுக்குத் தாங்கள் செய்யும் வேலை மட்டுமே தெரியும்” என்று பதில் கூறினார்கள்.
“உலகிலே மண்பாண்டங்களும், தீட்டிய வைரங்களும் இயற்கையாகவே கிடைத்தால் என்ன நடக்கும்?” என்று அவர்களிடம் கேட்டார்.
“எங்கள் வேலைக்கே மதிப்பில்லாமல் போய்விடும்!” பயத்துடன் பதில் சொன்னார்கள்.
“அப்படியானால் உங்கள் வேலைக்கு என்ன மதிப்பு?” பெரியவர் கேட்டார்.
“களிமண்ணைப் பாண்டமாக உருவாக்குவதும், இயற்கையில் கிடைக்கும் வைரத்தை மின்னல் போல் பளபளக்கச் செய்வதும்தான்” என்று இருவரும் சொன்னார்கள்.
“உலகில் குறைகள் இருப்பதால்தான் உங்கள் இருவருக்கும் வேலை இருக்கிறது. அந்தக் குறைகளை நிறை செய்யும் திறமை உங்களுக்கு இருப்பதால் உங்களை மக்கள் மதிக்கிறார்கள். அந்தத் திறமை மற்றவர்களை விட உங்களுக்கு அதிகமாக இருப்பதால்தான் உங்களைத் தேடி வருகிறார்கள். நீங்கள் அதைப் பெரிதாக நினைக்காமல், குறைகளால் ஏற்படும் வருத்தங்களைப் பெரிதாக நினைக்கிறீர்கள். மகிழ்ச்சியும் மகிழ்ச்சியின்மையும் உங்கள் எண்ணங்களிலேயே இருக்கிறது. நீங்கள் செய்யும் வேலையில் இல்லை. செய்யும் வேலையிலுள்ள கஷ்டங்களை மறந்து தனது தொழிலைச் சிறப்பாகச் செய்கிறவன் மகிழ்ச்சியுடன் இருக்கிறான். செய்யும் வேலையிலிருக்கும் கஷ்டங்களை மட்டும் பார்ப்பவன் வருத்தத்துடன் இருக்கிறான்” என்றார்.
அவர்களிருவருக்கும் புரிந்தது. உங்களுக்கு...?