ஒரு தோட்டத்தில் நிறைய குரங்குகள் இருந்தன.
பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன.
தோட்டக்காரன் செய்யும் வேலைகளைப் பார்த்துப் பார்த்துக் குரங்குகளும் அவற்றைச் செய்து விளயாடும்.
ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குச் செல்ல வேண்டியிருந்தது.
குரங்குகளை அழைத்து தோட்டத்திலிருக்கும் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று சொன்னான்.
குரங்குகளுக்கு மகிழ்ச்சி. ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்னை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை. எனவே அவை தோட்டக்காரனிடம் எப்படி தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று கேட்டன.
“அது ஒண்ணும் பெரிய பிரச்னயில்லை. வேர் பெரிதாக இருந்தால் நிறைய தண்ணீர் ஊற்ற வேண்டும். சிறிய வேராக இருந்தால் கொஞ்சமாக ஊற்ற வேண்டும்” என்று குரங்குகளுக்கு யோசனை சொன்னான்.
குரங்குகளும் சரி என்றன.
தோட்டக்காரன் வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தைப் பார்த்து அதிர்ந்து போனான்.
தோட்டத்திலிருந்த செடிகள் அனைத்தும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன.
அவன் குரங்குகளிடம், “இது எப்படி நடந்தது?” என்று கேட்டான்.
“வேர் பெரிதாக இருக்கிறதா, சிறியதாக இருக்கிறதா என்று பார்க்க நாங்கள்தான் செடிகளைப் பிடுங்கிப் பார்த்துத் தண்ணீர் ஊற்றினோம்” என்றன அந்தக் குரங்குகள்.
தோட்டக்காரன் அதைக் கேட்டு அங்கேயே சரிந்தான்.
எந்த வேலையை யாரிடம் கொடுப்பது என்று தெரியாமல் கொடுத்தால் இப்படித்தான் பெரும் இழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும்.