புத்தியைப் பயன்படுத்தத் தெரியாதவர்கள் நிலை...?
ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவன் இருந்தான்.அவன் கடுமையாக அவன் வயலில் உழைத்து தக்காளி பயிரிட்டு வந்தான்.
தக்காளி அமோகமாக விளையும். அதில் சில சொத்தை தக்காளிகளும் இருக்கும். அவற்றையெல்லாம் அவன் தன் வீட்டில் இருக்கும் மாடுகளுக்கும், ஆடுகளுக்கும் உணவாகப் போட்டு வந்தான்.
அவனது உழைப்பு, செய்கை, குணம் எல்லாவற்றையும் பார்த்த இறைவன் அந்த ஆண்டு அவன் வயலில் விளைந்த தக்காளி முழுவதையும் சொத்தை தக்காளியாக இல்லாமல் நல்லவைகளாக வளர அருளினார்.
அதைப்பார்த்த விவசாயி மிகவும் கவலைப்பட்டான்.
ஊரிலிருப்பவர்கள், “இந்த வருடம்தான் தக்காளிகள் நன்றாக விளைந்திருக்கிறதே...! அப்புறம் ஏன் கவலையாக இருக்கிறாய்...?” என்றனர்.
“என் வயலில் விளைந்த சொத்தைத் தக்காளிகளை எல்லாம் ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் போட்டு வந்தேன். இப்போது எல்லா தக்காளிகளும் நன்றாக இருக்கின்றன. நான் அவற்றிற்கு போட சொத்தை தக்காளிக்கு எங்கே போவேன்...? அதுதான் என் கவலை” என்றான்.
கடினமாக உழைப்பவர்களாக இருந்தாலும், புத்தியைப் பயன்படுத்தத் தெரியாதவர்களுக்கு, ஆண்டவன் அருள் கிடைத்தாலும் பயன் இல்லை...
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.