இரு நண்பர்கள் இருந்தனர். அவர்களில் முதலாமவன் நல்லவன். இரண்டாமவன் அவனுக்கு நேரெதிராய்ச் சுயநலவாதியாக இருந்தான்.
ஒரு நாள் இருவரும் போகும் வழியில் முதலாமவன் ஒரு மூட்டையைப் பார்த்தான். அதில் பொன்னும்... மணியும் இருந்தது.
உடனே அதைக் கையிலெடுத்த அவன், “நான் புதையலைக் கண்டேன்” என்றான்.
அதைக் கேட்ட இரண்டாமவன், “இல்லை நண்பா... நான் என்று சொல்லாதே... நாம் புதையலைக் கண்டோம்...என்று சொல்” என்றான்.
தனக்கும் அதில் பங்கு உண்டு என்று மறைமுகமாக உணர்த்தினான்.
அவர்கள் சிறிது தூரம் சென்றதும், அந்த மூட்டைக்கு உரியவன் திரும்பி வந்து கொண்டிருந்தான். அவன் தனது மூட்டை ஒருவனிடமிருப்பதையும், அவனுடன் இன்னொருவன் சேர்ந்து வருவதையும் பார்த்தான். உடனே அவன் அவர்களைப் பார்த்து, “திருடன்... திருடன்...” என்று கத்தியபடி ஓடி வந்தான்.
இதைக் கேட்ட முதலாமவன், “நண்பா, நாம் ஒழிந்தோம்” என்றான்.
உடனே இரண்டாமவன், “இல்லை நண்பா, நீ முன்னால் சொல்லியபடியே சொல். நீயே மூட்டையைக் கண்டெடுத்தாய். நாம் இல்லை...”என்றபடி அங்கிருந்து ஓடி விட்டான்.
நமக்கு இலாபம் வரும்போது நம்முடனும்... ஆபத்து வரும்போது நம்மை விட்டு விலகி ஓடுபவனையும் நாம் நண்பனாக ஏற்றுக் கொள்ளக்கூடாது. அவர்கள் நம் எதிரியை விடக் கொடியவர்கள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.