ஒரு ஊரில் ஒரு முனிவர் இருந்தார். அவரைப் பார்க்க நான்கு பேர் வந்தனர்.
அவர்கள் முனிவரிடம், “சுவாமி, எங்களால் இந்த உலகத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை... இந்த உலகத்தைப் புரிந்து கொள்ள என்ன வழி?” என்று கேட்டனர்.
அந்த முனிவர், “தெரியவில்லையே...” என்றார்.
இருப்பினும், வந்தவர்கள் அவரை விடவில்லை. “என்ன சுவாமி, நீங்க எவ்வளவு பெரிய முனிவர், உங்களுக்கு இது கூடத் தெரியலைன்னு சொல்லலாமா? நீங்கள்தான் எங்களுக்கு வழிகாட்ட வேண்டும்” என்று கேட்டனர்.
முனிவர் அவர்களிடம், “சரி, இப்ப நான் உங்களை ஒரு பறக்கும் பாயின் மூலம் இங்கிருந்து அழைத்துச் செல்கிறேன். செல்லும் வழியில் ஒரு காட்சியை உங்களுக்குக் காண்பிக்கிறேன். அது குறித்து நீங்கள் உங்களின் கருத்தைச் சொல்ல வேண்டும். உங்கள் கருத்து தவறாக இருந்தால் இந்தப் பறக்கும் பாய் உங்களைக் கீழே தள்ளிவிட்டு விடும் ” என்றார்.
இதற்குச் சம்மதித்த நால்வரும் அவருடன் அந்த பறக்கும் பாயில் ஏறி அமர்ந்து கொண்டனர்.
முனிவரின் மந்திர சக்தியினால் அந்த பறக்கும் பாய் வானில் பறந்தது.
சிறிது தூரம் போன பிறகு காட்டில் ஒரு கர்ப்பமடைந்த புலி , குட்டிகளை ஈன்று கொண்டிருந்தது. அந்தப் புலி, குட்டிகளை ஈன்ற பின்பு, தனக்கும் தன் குட்டிகளுக்கும் பசிக்கு இரை தேடிச் சென்றது.
அப்போது அந்தப் பக்கமாக ஒரு மான், அதுவும் குட்டி ஈன்று விட்டுப் பசிக்குத் தண்ணீர் தேடி அங்கிருந்த ஓடைப் பக்கமாக வந்தது. மானைப் பாத்த அந்தப் புலி திடீரென்று அதன் மேல் பாய்ந்து, அதைக் கொன்று சாப்பிட்டது. அப்படியே மீதி இருந்த இறைச்சியினை எடுத்துக் கொண்டு வந்து குட்டிகளுக்கும் கொடுத்தது. அதைச் சாப்பிட்ட புலிக்குட்டிகள் அனைத்தும் மகிழ்ச்சியடைந்ததன.
ஆனால், தண்ணீர் குடிக்கச் சென்ற தங்கள் தாய் மான் வராததை நினைத்துக் குட்டி மான்கள் கவலையடைந்தன.
இந்தக் காட்சிகளை அவர்களிடம் காட்டிய முனிவர், “இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று கேட்டார்.
அந்த நான்கு பேரில் ஒருவர், “இது மிகவும் தவறு. மான் குட்டிகளுக்கு இப்பொழுது தாய் இல்லாமல் போய்விட்டதே...” என்று வருத்தமடைந்தார்.
உடனே அந்தப் பறக்கும் பாய் அவரைக் கீழே தள்ளி விட்டது.
இரண்டாவதாக இருந்தவனைப் பார்த்து முனிவர், “உன் கருத்து என்ன?” என்று கேட்டார்.
ஏற்கனவே ஒருவன் கீழே விழுந்து விட்டதைப் பார்த்த அவன், “இல்லை... இது சரிதான்... புலிகளுக்கு இரையாகத்தானே மான்கள் இருக்கின்றன” என்றான்.
உடனே அவனையும் பறக்கும் பாய் கீழே தள்ளி விட்டுவிட்டது.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த மூன்றாமவன் மிகவும் கவனமாக, “இது தப்புமில்லை, சரியுமில்லை...” என்றான்.
அந்தப் பறக்கும் பாய் அவனையும் கீழே தள்ளிவிட்டது.
கடைசியாக இருந்தவனிடமும் முனிவர் அவர்களிடம் கேட்டதைப் போன்றேக் கேட்டார்.
அவன், “தெரியலையே சுவாமி” என்றான்.
பறக்கும் பாய் அவனைக் கீழே தள்ளவில்லை. முனிவரையும், அவனையும் சுமந்து சென்றது.
நம்ம வாழ்க்கைக்கு எது தேவையோ, அதை மட்டும் நாம் புரிந்து கொண்டால் போதும்... தேவையில்லாத விசயங்களைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்வதால்தான் பிரச்சனைகள் வந்து விடுகின்றன.
அது போல தனக்கு அறிவில்லாத விசயங்கள் குறித்து தனக்கு தெரிந்த் மாதிரி பேசுறதும் அனாவசியம். தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்.