ஒரு பணக்கார மனிதனுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தனர். இந்த இரண்டு பிள்ளைகளில் இளைய மகன் தந்தையை நோக்கி, "நமக்குச் சொந்தமான சொத்துக்கள் அனைத்திலும் இரண்டாகப் பகிர்ந்து எனது பங்கை எனக்குத் தாருங்கள்" என்று கூறினான். தந்தையும் ஒற்றுமையாக இருந்தால் இருக்கும் வளம் மேலும் பெருகும். அண்ணன் தம்பி இருவரும் ஒன்றாக இருக்கும்படி வலியுறுத்தினார். ஆனால் அவனோ அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை.
தந்தையும் சில நாட்களில் தனது அனைத்துச் சொத்துக்களையும் இரண்டாகப் பங்கிட்டு இருவரிடமும் சமமாக வழங்கினார். சில நாட்கள் கழித்து இரண்டாவது மகன் தனக்குக் கொடுத்த சொத்துக்களையெல்லாம் விற்றுப் பணமாக்கி அதை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான். வேறொரு தூரதேசத்திற்குப் பயணமானான்.
அங்கு அவன் பணத்தை மூடனைப் போல் வீணாகச் செலவு செய்தான். கடைசியில் அவன் கொண்டு வந்திருந்த பணம் முழுவதும் காலியாகி விட்டது. கையில் பணமில்லாமல் பசியால் மிகவும் துன்பப்பட்டான்.
எனவே அந்நாட்டிலிருந்த ஒருவனிடம் தனக்கு வேலை தரும்படி கேட்டான். அவனும் அவனை வேலக்கு அமர்த்தினான். அவனுக்குப் பன்றிகளுக்குத் தீவனமிடும் வேலை கொடுக்கப்பட்டது. அவனுக்கு உணவு தருவதற்கு யாரும் தயாராயில்லை. அவன் பசி மிகுதியால் பன்றிகள் சாப்பிடும் உணவையாவது உண்ண வேண்டும் என்று நினைத்தான். ஆனால் அந்த உணவும் கிடைக்கவில்லை.
அப்போதுதான் அவனுக்குத் தன்னுடைய மூடத்தனம் தெரிந்தது. தன் தந்தை வீட்டில் எவ்வளவு பேர் வேலை பார்க்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் பஞ்சமில்லாமல் உணவு வழங்கப்படுகிறது. இங்கு தனது பங்கைப் பிரித்து வாங்கி வந்து அந்தப் பணத்தையெல்லாம் மூடத்தனமாகச் செலவு செய்து விட்டு இப்படி கஷ்டப்படுகிறோமே என்று வருந்தினான்.
தன் தந்தையிடம் சென்று மன்னிப்பு கேட்டு அந்த வீட்டில் ஒரு வேலைக்காரனைப் போல் வேலை செய்தாவது நாம் பசியேயில்லாமல் வாழ்வோம் என்று முடிவு செய்தான். உடன் தந்தை வீட்டை நோக்கிப் பயணம் செய்தான்.
தொலைவில் மகன் முகம் வாடி பசியுடன் வருவதைப் பார்த்த அவன் தந்தை அவனை நோக்கி வேகமாக ஓடினார். மகனைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டார். மகனும் அழுதான். அப்பாவின் பேச்சைக் கேட்காமல் பிரிந்து சென்று கஷ்டப்பட்டதைக் கூறி அழுதான். தன்னை வீட்டில் ஒரு வேலைக்காரனாகவாவது வைத்துக் கொள்ளும்படி கெஞ்சினான். ஆனால் அவன் தந்தை வேலைக்காரர்களை அழைத்து நல்ல விலையுயர்ந்த ஆடை ஆபரணங்களைக் கொண்டு வந்து கொடுக்கச் செய்தான். வீட்டில் நல்ல உணவைச் சமைக்கச் செய்தார். அங்கிருக்கும் வேலைக்காரர்கள் அனவருக்கும் சிறப்பு விருந்துக்கும் ஏற்பாடு செய்தார்.
மூத்த மகன் வயலில் இருந்து திரும்பி வந்தான். வீட்டில் விருந்து நடப்பதைப் பார்த்து வேலைக்காரர்களில் ஒருவனை அழைத்து விசாரித்தான். அவனது சகோதரன் திரும்பி வந்திருப்பதை அறிந்தான். தந்தையும் மகிழ்ச்சியாக இருப்பதாக அறிந்தான். பங்கைப் பிரித்து வாங்கி வீட்டை விட்டு வெளியேறிய மகனுக்குத் தடபுடலாக விருந்து நடப்பதை அறிந்து வேதனையடைந்தான். அவன் தந்தை மேல் கோபமடைந்தான். வீட்டுக்குச் செல்லாமல் அப்படியே திரும்பினான்.
இதையறிந்த தந்தை தனது மூத்த மகனைத் தேடிச் சென்றார். எல்லா நேரங்களிலும் நீ என்னுடன் இருக்கிறாய். உன்னுடைய பங்கிலுள்ள சொத்துக்கள் தவிர என்னுடைய சொத்துக்கள் அனைத்தும் உனக்கே உரியது. நாம் சந்தோஷமாக உணவு உண்ண வேண்டும். இறந்து போயிருந்த உன் சகோதரன் இன்று திரும்பி வந்திருக்கிறான். திருந்தியும் வந்திருக்கிறான். அவனிடம் நாம் காட்டும் அன்புதான் அவனை மீண்டும் மனிதனாக்கும். என்றார். மூத்த மகனும் தந்தை சொல்வதை சரியென்றபடி வீட்டுக்குத் திரும்பினான்.
தம்பி அண்ணனைப் பார்த்து கதறியழுதான். அண்ணனும் தன் தம்பியைக் கட்டிப்பிடித்து இனியாவது நல்லவனாக நடந்து கொள் என்றான்.