ஒரு அரசனுக்கு தீடிரென இரண்டு கண்களும் குருடாகிவிடுகிறது.
அதை குணப்படுத்த மலையுச்சியில் உள்ள சஞ்சீவி மலையில் உள்ள மூலிகையை கொண்டு வந்து பிழிந்தால் தான் முடியும். அங்கு செல்வதற்கு மலையடிவாரத்தில் உள்ள தேவதை ஒன்று வழிகாட்டினால்தான் முடியும்.
அந்த அரசனுக்கு மூன்று குமாரர்கள்.
அதில் முதலாமவன், நான் போய் அந்த மூலிகையைக் கொண்டு வருகிறேன் என கிளம்பினான்.
மலையடிவாரத்திலிருக்கும் தேவதை அவனுக்கு மலையுச்சிக்குச் செல்வதற்கான வழியினைக் காட்ட ஒரு நிபந்தனையை விதித்தது.
“நான் உன் பின்னால் வருவேன். நான் இடது பக்கம் திரும்பு என்றால் நீ இடது பக்கம் திரும்ப வேண்டும், வலது பக்கம் திரும்ப வேண்டும் என்றால் நீ வலது பக்கம் திரும்ப வேண்டும். நீ நடப்பதை நிறுத்தக் கூடாது. நடந்து கொண்டே இருக்கவேண்டும். எது நடந்தாலும் பின்னால் திரும்பிப் பார்க்கக்கூடாது”என்றது.
அவனும் அதற்குச் சம்மதித்து முன்னால் சென்றான்.
முதாலாமவன் தனக்குப் பின்னால் நடந்து வரும் தேவதையின் சலங்கை ஒலியைக் கேட்டபடி முன்னால் நடந்து சென்று கொண்டிருந்தான்.
தீடிரென அவனுக்குப் பின்னால் வரும் தேவதையின் சலங்கை ஒலி கேட்கவில்லை.
என்னவாயிற்று? என்று தன்னையறியாமல் அவன் திரும்பிப் பார்த்தான். நிபந்தனையை மீறியதால் அந்த இடத்திலேயே அவன் கற்சிலையாகி விட்டான்.
அடுத்து இரண்டாமவன் கிளம்புகிறான்.
அவனும் தேவதையின் நிபந்னைகளுக்குக் கட்டுப்பட்டு பாதிதூரம் சென்று விடுகிறான்.
தீடிரென பின்புறமிருந்து சிரிப்பு ஒலி கேட்கிறது.
ஆர்வம் மிகுதியால் அவனும் திரும்பிப் பார்த்து விடுகிறான். அவனும் கற்சிலையாகி விட்டான்.
மூன்றாமவன் அடுத்து வருகிறான்.
அவனுக்கும் அதே நிபந்தனையுடன் தேவதை வழிகாட்ட முன் வந்தது. அவனும் பின் வரும் சத்தம் நின்று போனாலும் முன்னே சென்றான். பின்னால் அலறல் சத்தம், சிரிப்பொலி என்று எது கேட்டாலும், அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் முன்புறம் நடந்து சென்று கொண்டிருந்தான். தேவதையும் அவனுக்கு வழிகாட்டிச் சென்று கொண்டிருந்தது.
கடைசியில் மலையுச்சிக்குச் சென்று மூலிகையைப் பறிக்கிறான். தந்தையைக் குணப்படுத்துகிறான். தந்தை அவனுக்கு அந்நாட்டின் மன்னனாக முடிசூட்டி வைக்கிறார்.