மதிய வேளையில் மரப்பொந்தில் ஆந்தை தூங்கிக் கொண்டிருந்தது. கீழே புல்தரையில் வெட்டுக்கிளி ஒன்று பாட்டு பாடிக் கொண்டிருந்தது.
வெட்டுக்கிளியின் பாடல், தன் தூக்கத்துக்கு இடையூறாக இருப்பதாக எண்ணிய ஆந்தை வெட்டுக்கிளியிடம், பாடுவதை நிறுத்தும்படி கேட்டது.
வெட்டுக்கிளி ஆந்தை சொன்னதைக் கேட்காமல், ஆந்தையைப் பார்த்து, “நீயோ பகலில் குருடு. உன்னால் பகலில் வெளியே தலைகாட்ட முடியாது. நல்லவர்கள் அனைவரும் இரவில் தூங்கிய பின்புதான் நீ வெளியே வருவாய். உன்னைப் போன்றவர்கள் இருப்பதே அவமானம்”என்று திட்டியது.
ஆந்தை சிறிதுநேரம் யோசனை செய்தது. தந்திரத்தால்தான் வெட்டுக்கிளியை அடக்க வேண்டும் என்று தீர்மானித்தது.
அதன் பின் ஆந்தை வெட்டுக்கிளியிடம், "நண்பனே, நீ என்னைத் தூங்கவிடாமல் செய்ய விரும்பினால் செய்துவிட்டுப் போ. ஆனால், விழித்துக் கொண்டிருப்பதற்கு இனிமையாய் இருப்பதற்காகவாவது உன் சங்கீதம் உபயோகப்படட்டும். உன் சாரீரம் இனிமையானது. அதைத் தேவகானம் மாதிரி செய்வதற்கு என்னிடம் ஓர் அமிர்தம் இருக்கிறது. அதில் இரண்டு துளி நீ சாப்பிட்டால் போதும். உன் குரலும் அமிர்தமாகி விடும். இங்கு வந்தால் நான் உனக்கு அந்த அமிர்தத்தைத் தருகிறேன்"என்றது.
ஆந்தை பேச்சைக் கேட்டு ஏமாந்த வெட்டுக்கிளி மரத்தில் ஏறி ஆந்தையிடம் போயிற்று. பக்கத்தில் வந்ததும ஆந்தை அதைப் பிடித்து நசுக்கிக் கொன்றது.
பயத்தைக் காட்டிலும் நயவஞ்சகத்தில்தான் பலரும் மாட்டிக் கொண்டு விடுகிறார்கள்