அந்தப் பெரியவரின் கையில் ஒரு கண்ணாடி. அடிக்கடி அதைப் பார்ப்பார். பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கி விடுவார்.
இதைக் கண்ட பக்கத்து வீட்டு இளைஞனுக்கு வியப்பு. ‘அந்தக் கண்ணாடியில் அப்படி என்னதான் இருக்கிறது? பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே ஒரு வேளை அது மாயாஜாலக் கண்ணாடியோ?’ அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பெரியவரை நெருங்கினான்.
.
“ஐயா!”
“என்ன தம்பி?”
“உங்கள் கையில் இருப்பது கண்ணாடிதானே?”
“ஆமாம்!”
“அதில் என்ன தெரிகிறது?”
“நான் பார்த்தால் என் முகம் தெரியும், நீ பார்த்தால் உன் முகம் தெரியும்!”
“அப்படியானால் அது சாதாரணக் கண்ணாடிதானே...?”
“ஆமாம்”
“பிறகு ஏன் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?”
பெரியவர் புன்னகைத்தார்.
பின்னர், “சாதாரணக் கண்ணாடிதான், ஆனால் அது தரும் பாடங்கள் நிறைய!” என்றார்.
“பாடமா...? கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் பெற முடியும்?”
“அப்படிக் கேள் தம்பி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “உங்களில் ஒவ்வொருவரும் மற்றவர்க்குக் கண்ணாடி போன்றவர்கள்” என்று சொல்லியிருக்கிறார்கள். எத்தணை ஆழமான உவமை இது”
“இந்த உவமையில் என்ன இருக்கிறது? எனக்கு ஒன்றும் புரியவில்லை!”
“ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படிச் சுட்டிக்காட்ட வேண்டும்? எப்படிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும்? என்பதையெல்லாம் இந்தச் சின்ன உவமை மூலம் இறைத்தூதர் சிறப்பாகச் சொல்லி விட்டார்”
“எப்படி?”
“நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா?
“ஆமாம்”
“அதே போல் உன் சகோதரனிடம் அல்லது நண்பனிடம் எந்த அளவுக்குக் குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்பதை இந்தக் கண்ணாடி அருமையாக நமக்குக் காண்பிக்கிறது” என்றார்.
உள்ளதை உள்ளபடி சொல்வதுதான் சிறப்பு என்பதை அந்த இளைஞன் உணர்ந்து கொண்டான்.