இரண்டு மன்னர்களுக்கிடையில் சண்டை.
தோற்றவனிடம் வென்றவன், “நான் கேட்கும் கேள்விக்குச் சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே” என்று சொன்னான்.
வென்ற மன்னனின் காதலி, அவனிடம் இக்கேள்வியைக் கேட்டு விடை சொன்னால்தான் நம் திருமணம் எனச் சொல்லியிருந்தாள்.
அந்தக் கேள்வி இதுதான், “ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்?”
தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான், விடை கிடைக்கவில்லை. கடைசியாகச் சிலர் சொன்னதால் ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று கேட்டான்.
அவள், “நான் உனக்கு இந்தக் கேள்விக்கு விடை சொல்கிறேன். இந்தக் கேள்விக்கு விடை தெரிந்தால், உனக்கு நாடு கிடைக்கும், உன்னை வென்ற மன்னனுக்குக் காதலி கிடைத்து, அவர்களுக்குத் திருமணம் நடக்கும். ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்?” என்று கேட்டாள்.
அவன், “நீ என்ன கேட்டாலும் தருகிறேன்” என்றான்.
அவள், “தன் சம்பந்தமான முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதே பெண்ணின் ஆழ்மனது எண்ணம்” என்று கேள்விக்கு விடை சொன்னாள்.
இப்பதிலை அவன் அந்த மன்னனிடம் சொல்லி, அவன் அவனுடைய காதலியிடம் சொன்னான். அவர்கள் திருமணம் நடந்தது, இவனுக்கும் நாடு திரும்பக் கிடைத்தது.
உடனே அவன் கிழவியிடம் வந்து, “உன் பதில் சரியாகி விட்டது. எனக்கும் நாடு திரும்பக் கிடைத்து விட்டது. உனக்கு வேண்டியதைக் கேள்” என்றான்.
அவள், “நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்று கேட்டாள்.
கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காக அவன் அந்தக் கிழவியைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டான்.
அவன் ஒப்புக் கொண்ட மறு நிமிடம் அந்தக் கிழவி, ஒரு அழகிய தேவதையாக மாறிக் காட்சி அளித்தாள்.
அவள், “நாம் தனியாக இருக்கும் போது கிழவியாக இருந்தால், உன்னுடன் வெளியே வரும்போது தேவதையாக இருப்பேன். தனியே இருக்கும் போது அழகிய பெண்ணாக இருந்தால், வெளியே செல்கையில் சூனியக்கார கிழவியாகி விடுவேன். இவை இரண்டில் எது உன் விருப்பம்?” என்று கேட்டாள்.
அவன் எதையும் யோசிக்காமல், “இது உன் சம்பந்தப்பட்ட விஷயம், இதில் நீதான் முடிவு எடுக்க வேண்டும்” என்று சொன்னான்.
அவள், “என்னிடம் நீ முடிவை விட்டு விட்டதால், நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்!” என்றாள்.
ஆம்! பெண் அவள்தொடர்புடைய முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள். முடிவுகள் அவள் மீது திணிக்கப் படும்போது சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்.
பெண்களைப் புரிந்து செயல்படுபவர்கள் வெற்றியடைகிறார்கள்.