உண்மையை உணர்வது எப்போது?
ஒரு பக்தன் அழகான மண்டபம் ஒன்றைக் கட்டினான். அது எண்கோண வடிவில் இருந்தது. அதன் எட்டுப் பக்கச் சுவர்களிலும் நிலைக் கண்ணாடிகள் பதித்திருந்தான். எந்த உருவமும் எந்தத் திசையில் பார்த்தாலும் தெரியும்படி அமைக்கப்பட்டிருந்தது.
மண்டபத்தின் நடுவே அழகான ஒரு மலரைக் கொண்டு வந்து வைத்தான் பக்தன். அழகான மலர், எட்டுப் பக்கங்களிலும் எட்டு மலர்களாகத் தோற்றம் அளித்தது. அவன் கதவை மூடும் முன் அந்த மண்டபத்துக்குள் சிறு வெண்புறா ஒன்று நுழைந்து விட்டது. அது கண்ணாடியில் தனது பிம்பத்தைப் பார்த்தது.
கண்ணாடியில் தெரியும் பிம்பத்தையே உண்மை என்று எண்ணி அதை நோக்கிப் பாய்ந்து பறந்தது. எட்டு திசைகளிலும் அது மாறி மாறிப் பறந்து கண்ணாடியில் மோதிற்று. ஆனால் அந்தப் பறவையால் வெளியேற முடியவில்லை.
கடைசியில் புறா சோர்ந்து போய்த் தரையில் விழுந்தது. அதன் அருகே இருந்த அழகான மலரை அது அப்போது தான் பார்த்தது. அந்த இடத்தில் அதுவே உண்மை என்பதை உணர்ந்து கொண்டது.
வாழ்க்கையில் அந்தப் புறாவைப் போலவே, நாம் மாய நிழல்களைத் தேடி அலைகிறோம். நமக்குள்ளேயே இருக்கும் இறைவனை நாம் உணருவதில்லை. வாழ்க்கையில் தோல்விகளை அடைந்து, மனம் சலித்துப் போய் விழும் வேளையில் நிதர்சனமான உண்மை எது என்பதை உணருகிறோம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.