புத்தரின் சீடர்களில் முக்கியமானவர் பூர்ணா. ஒரு முறை அவர் தர்மப் பிரசாரம் செய்யப் புறப்படுவதற்கு முன்னால் புத்தரின் அனுமதியைக் கோரினார்.
புத்தர் அவரிடம், “பூர்ணா, எங்கே போய் தர்மப் பிரசாரம் செய்யப் போகிறாய்?” என்று கேட்டார்.
“குருவே, சூனப்ராந்தம் என்ற இடத்தில் செய்யப் போகிறேன்” என்றார் அவர்.
“அதுவா? அங்குள்ள்வர்கள் கல்வியறிவு இல்லாதவர்களாயிற்றே, உன் அறிவுரைகளை ஏற்காமல் அவர்கள், உன்னை இகழ்ந்து பேசினால் என்ன செய்வாய்?”
“அதனால் என்ன? கையால் அடிக்காமல் விட்டார்களே என்று மகிழ்ச்சியுடன் பிரசாரம் செய்வேன்”
“சரி, அப்படி எவராவது உன் முகத்தில் கைகளால் குத்தி விட்டால்...?”
“அதனால் என்ன, ஆயுதங்களைக் கொண்டு தாக்கவில்லையே என்று எண்ணி மகிழ்ந்து என் தர்மப் பிரசாரத்தைத் தொடருவேன்”
“ஆயுதங்களைக் கொண்டு தாக்கினால் என்ன செய்வாய்?”
“அதனாலும் ஒன்றுமில்லை, ஆளைக் கொல்லவில்லையே, அந்த அளவுக்கு நல்லவர்கள்தான் என்றெண்ணி என் பணியைத் தொடருவேன்”
“சரி, உன்னையேக் கொன்றுபோட்டுவிட்டால்...?”
“மிகவும் மகிழ்ச்சியுடன் இறப்பேன். அட இவ்வளவு விரைவாக நிர்வாண நிலையை (முக்தி) அடைய அவர்கள் உதவினார்களே என்று பெருமை கொள்வேன்” என்றார் பூர்ணா.
புத்தர், “பூர்ணா, உன் விருப்பப்படியே செய், நீ முழுமையாகப் பக்குவம் பெற்றுவிட்டாய்” என்று சொல்லி ஆசி வழங்கினார்.