அரபு நாட்டில் இருந்த அஹமது என்கிற ஒரு பெரியார் இருந்தார். அவரிடம் ஓர் அழகிய குதிரை இருந்தது. அந்தக் குதிரையின் அழகில் கவரப்பட்ட பலர் அதற்கு எவ்வளவு விலை கொடுத்தும் வாங்கத் தயாராயிருந்தனர். ஆயிரக்கணக்கான தங்க நாணயங்களை அள்ளிக் கொடுக்கப் பலரும் முன் வந்தனர். ஆனால் அந்தப் பெரியவர் அதை விற்க முன்வரவில்லை.
அந்த அரபு நாட்டில் லைலா எனும் அழகிய மங்கை ஒருத்தியும் இருந்தாள். அவளை திருமணம் செய்து கொள்ள பல பணக்கார இளைஞர்களும் விரும்பினர். ஆனால், அவள் தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்களில் அந்தப் பெரியவரிடம் இருக்கும் அழகான குதிரையைத் தனக்கு நன்கொடையாகக் கொண்டு வந்து தருபவர்களைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகத் தெரிவித்தாள்.
அந்த லைலாவை விரும்பியவர்களுள் காசிம் என்பவனும் ஒருவன். அவன் அந்தப் பெரியாரிடம் சென்று தனக்கு அந்த அழகான குதிரையை விலைக்குத் தரும்படி கேட்டான். ஆனால் அந்தப் பெரியவர் அந்தக் குதிரையைத் தர மறுத்துவிட்டார். அவனும் தினசரி அந்தப் பெரியவரிடம் கெஞ்சிக் கேட்டான். ஆனால் அவர் மறுத்து விட்டார். காசிம் பல நாட்கள் அவர் வீட்டுக்குச் சென்று பல வழிகளில் கேட்டும் அவர் அந்தக் குதிரையைக் கொடுப்பதாக இல்லை.
கடைசியாக காசிம் ஒரு யோசனை செய்தான். அந்தப் பெரியவர் தினசரி குதிரையில் சவாரி செய்துவிட்டுத் திரும்பும் வழியில் ஒரு நீண்ட போர்வையால் தன்னை முழுவதுமாக மறைத்துக் கொண்டு ஒரு நோயாளியைப் போல் முக்கி முனகிக் கொண்டே படுத்துக் கிடந்தான்.
அவன் அப்படிக் கிடப்பதைப் பார்த்த அந்தப் பெரியவர் உனக்கு உடல்நிலை சரியில்லையா? என்று விசாரித்தார். உடனே அவனும் தான் நோய்வாய்ப் பட்டிருப்பதாகவும், நடக்க முடியாமல் இருப்பதாகவும் தன்னைப் பக்கத்தில் உள்ள வைத்தியர் ஒருவர் வீட்டில் விட்டுவிடும்படியும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்.
அந்தப் பெரியவரும் அவன் மேல் இரக்கப்பட்டு அவனை அந்தக் குதிரையின் மேல் ஏற்றி குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தபடி நடந்து சென்றார். சிறிது தூரம் சென்றதும் குதிரை மேலிருந்த காசிம் தனது துணியில் பணத்தை முடிந்து வைத்திருந்ததாகவும் அது சிறிது தொலைவிற்கு முன்னால் விழுந்து விட்டதாகவும் அதை எடுத்து வந்து தரும்படியும் கேட்டான். அதைக் கேட்ட பெரியவரும் கடிவாளத்தை விட்டுவிட்டு அதை எடுத்து வருவதற்காகத் திரும்பினார்.
அவ்வளவுதான் கடிவாளத்தைப் பற்றிக் கொண்டு குதிரையை விரட்டத் துவங்கினான். அத்துடன் நிற்காமல் குதிரையை விலைக்குக் கேட்டேன் தரவில்லை. இப்பொழுது குதிரையை என் யோசனையில் அடைந்து விட்டேன். என்று ஏளனமாகச் சிரித்தான்.
உடனே அந்தப் பெரியவர், "தம்பி ஒரு வார்த்தையை மட்டும் கேட்டுச் செல்." என்றார். உடனே அவனும் " சரி, அங்கிருந்தே சொல்லுங்கள்..." என்றான்.
அந்தப் பெரியவர் உடனே, "உன்னிடமிருந்து ஒரே ஒரு உறுதிமொழி மட்டும்தான் எதிர்பார்க்கிறேன். அதை மட்டும் நீ செய்து விட்டால் எனக்கு ஏற்பட்ட இழப்பைப் பற்றி சிறிதும் கவலைப்பட மாட்டேன். அதாவது, நீ எவரிடமும் இந்தக் குதிரையை என்னிடமிருந்து நயவஞ்சகத்தால் அபகரித்துக் கொண்டதாகக் கூறாதே... அப்படிச் செய்வது இஸ்லாத்தின் புனிதத்தன்மைக்குக் களங்கம் உண்டு பண்ணுவதாகும்." என்றார்.
அந்தப் பெரியாருடைய வாயிலிருந்து இந்த வார்த்தைகள் வெளிவந்ததுதான் தாமதம். உடனே குதிரையிலிருந்து கீழே குதித்து அந்தப் பெரியவரிடம் கடிவாளத்தைக் கொடுத்து "என்னை மன்னியுங்கள். நான் ஒரு போதும் இஸ்லாத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் இழி செயலைச் செய்யமாட்டேன். இது சத்தியம் என்று கூறிவிட்டுத் தன் வழியில் நடந்தான்.