குரங்காட்டியும், குரங்கும் மரணத்திற்கு பின்பு கடவுள் முன் நிறுத்தப்பட்டார்கள்.
குரங்கைப் பார்த்துக் கடவுள் சொன்னார், “தன் சுயநலத்திற்காக இந்தக் குரங்காட்டி, உன்னை வித்தை காட்டச் செய்து பல நாள் பட்டினி போட்டு, அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியுள்ளான். அவனை நீ மன்னிக்கிறாயா? அப்படி செய்தால் உனக்கு மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும்” என்றார்.
அதற்கு குரங்கு, “இவனை நான் மன்னிக்க மாட்டேன், நான் குரங்காட்டியாகவும், அவன் குரங்காகவும் மறுபடியும் பூமியில் பிறக்க வேண்டும். அதன் மூலம் நான் அவனை பழிதீர்க்க வேண்டும்” என்று கடவுளிடம் வேண்டியது.
கடவுளும் அந்தக் குரங்கின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார்.
குரங்கு குரங்காட்டியாகவும், குரங்காட்டி குரங்காகவும் பூமியில் பிறந்தனர். அதன் பின்பு, இருவரும் மரணமடைந்த பின் கடவுள் முன் நிறுத்தப்பட்டார்கள்.
இப்போது குரங்காக உள்ள பழைய குரங்காட்டியிடம் கடவுள், “உனக்கு மன்னிக்கும் குணம் உள்ளதா?” என்று கேட்டார்.
அது, “இவன் பூமியில் என்னைப் பயங்கரமாகக் கொடுமைபடுத்தி விட்டான், எனவே அவனைப் பழிவாங்க நான் குரங்காட்டியாகவும், அவன் குரங்காகவும் பிறக்கவேண்டும்” என்று கேட்டது.
மன்னிக்கும் குணம் இல்லாத காரணத்தினால் இருவரும் மாறி, மாறி பிறந்து இன்னும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.