ஒரு முறை சாணக்கியரிடம் ஒருவன், “உங்கள் நெருங்கிய நண்பரைப் பற்றி நான் ஒன்று கேள்விப்பட்டேன். நான் அதை உங்களிடம் சொல்லவா?” என்று கேட்டான்.
சாணக்கியர் அவனிடம், “நீங்கள் சொல்வதற்கு முன்னால், நான் கேட்கும் மூன்று கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லமுடியுமா?” என்று கேட்டார்.
அவனும் “சரி” என்றான்.
சாணக்கியர் அவனிடம், “நீங்கள் என் நண்பரைப் பற்றிச் சொல்லப் போகும் செய்தி உண்மையானதா?” என்று கேட்டார்.
அதற்கு அவன் “தெரியாது” என்றான்.
சாணக்கியர் அவனிடம், “நீங்கள் என் நண்பரைப் பற்றிய நல்ல விஷயத்தைச் சொல்லப்போகிறீர்களா?” என்று இரண்டாவது கேள்வியைக் கேட்டார்.
அதற்கு அவன், “இல்லை” என்றான்.
மூன்றாவதாக சாணக்கியர் அவனிடம், “நீங்கள் சொல்லப்போகும் செய்தியால் எனக்கு நன்மை ஏதுமுண்டா?” என்றார்.
அதற்கு அவன், “இல்லை” என்றான்.
அதைக் கேட்ட சாணக்கியர் புன்னகையோடு, “நீங்கள் சொல்லப்போகும் தகவல் உண்மையா என்றே உங்களுக்குத் தெரியாது. மேலும், அது நல்ல தகவலும் இல்லை என்று நீங்களே சொல்கிறீர்கள். கடைசியாக அதைக் கேட்பதால் எனக்கும் எந்தப் பயனும் இல்லை என்றும் சொல்லி விட்டீர்கள். அதன் பின்னரும் நீங்கள் சொல்வதை நான் ஏன் கேட்க வேண்டும்? நமது பொன்னான நேரத்தை ஏன் வீணாக்க வேண்டும்? நீங்கள் சொல்ல நினைப்பதைச் சொல்லாமல் இருப்பதே நல்லது” என்றார்.