கௌசிகன் என்னும் முனிவர் காட்டில் தவம் செய்து கொண்டிருந்தான். அப்போது அவர் அமர்ந்திருந்த மரத்தின் மேலிருந்த கொக்கு ஒன்று எச்சமிட அது அந்த முனிவரின் மீது வந்து விழுந்தது. அவரது தவம் கலைய அந்தக் கோபத்தில் அவர் கொக்கைப் பார்க்க, அந்தக் கொக்கு அவரது கோப நெருப்பில் வெந்து சாம்பலானது.
தன் தவம் கலைந்தாலும், தனது தவ வலிமை கொக்கை எரித்ததைக் கண்ட முனிவருக்கு அகங்காரம் உண்டானது.
பக்கத்திலிருந்த ஒரு கிராமத்திற்கு அவர் பிச்சைக்காகச் சென்றான்.
அவர் ஒரு வீட்டின் முன் போய் நின்று, “தாயே, எனக்குப் பிச்சையிடுங்கள்” என்றார்.
இப்படி அவர் பலமுறைக் கூப்பிட்டும், வீட்டுக்குள்ளிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அந்த வீட்டுப்பெண் அப்போது தனது கணவனுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தாள்.
முனிவர் மீண்டும் குரல் கொடுக்க, வீட்டினுள்ளிருந்து, “இதோ வருகிறேன், சற்றுப் பொறுங்கள்” என்று குரல் கேட்டது.
பின், அந்த வீட்டிலிருந்து உணவுத் தட்டோடு வீட்டின் தலைவி வந்தாள்.
தனது தவ வலிமையைத் தெரியாமல், இவள் நம்மைக் காக்க வைத்து விட்டாளே என்று நினைத்துக் கோபத்துடன் முனிவர் அவளைப் பார்த்தான்.
அவளோ, அதைக் கண்டு கொள்ளாமல், “கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?” என்றாள்.
அவள் சொன்னதைக் கேட்ட முனிவருக்கு ஆச்சரியம். தன் மீது எச்சமிட்ட கொக்கைத் தான் எரித்தது இவளுக்கு எப்படித் தெரியும்? என வியந்தான்.
அவனின் முகக்குறிப்பை உணர்ந்த அப்பெண், “முனிவரே! நீர் தவம் பற்றி தெரிந்து கொண்ட அளவிற்குத் தருமத்தைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ளவில்லை. தருமம் பற்றி அறிய, மிதிலை நகர் சென்று அங்கு வாழும் தருமவியாதனிடம் சென்று பார்” என்றாள்.
முனிவரும், மிதிலை நகருக்குச் சென்றார். அங்கு தருமம் பற்றி தனக்குப் போதிப்பவன் ஒரு தவசியாய் இருப்பான் என எணணினார். ஆனால், தருமவியாதனோ ஒரு கசாப்புக் கடையில் இறைச்சி வியாபாரம் செய்து வந்தான். முனிவரின் திகைப்பைக் கண்ட தருமவியாதன், “தருமத்தைப் பற்றி அறிய அப்பெண் உம்மை அனுப்பினாளா?” எனக் கேட்டான்.
முனிவரின் திகைப்பு இப்போது வியப்பாய் மாறியது. அப்பெண் என்னிடம் சொன்னது இவனுக்கு எப்படித் தெரிந்தது? என வியந்தார். ஆனால் முனிவரின் வியப்பிற்கு விடை தருமவியாதன் வீட்டில் கிடைத்தது.
தருமவியாதன், முனிவரைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவரை ஒரு பக்கமாக அமரச் செய்து விட்டு, தனது வயதான தாய் தந்தையரைக் குளிப்பாட்டி, அவர்களுக்கு உணவளித்து, ஓய்வு கொள்ளச் செய்து விட்டு முனிவரிடம் வந்தான்.
முனிவர் அவன் சொல்ல வருவதைக் கேட்காமல், தான் வீட்டில் விட்டு விட்டு வந்த தாய், தந்தையரைக் காண ஓடினான்.
உலகில் தவத்தினும் மேலான தருமம், தாய், தந்தையரைப் பேணுதல் என்பதை இன்றுள்ளவர்கள் உணர்வார்களா?