காட்டில் ஒரு ஓநாய் இருந்தது. அது மிகவும் தீய குணம் கொண்டது. தினமும் பலம் குறைந்த ஏதேனும் விலங்குகளையோ, அல்லது பறவைகளையோ கொன்று தன் பசியை தீர்த்துக் கொள்ளும்.
ஒரு நாள் அது இறந்த ஒரு விலங்கின் உடலைத் தின்ற போது, ஒரு எலும்புத் துண்டு, அதனுடைய தொண்டையில் போய்ச் சிக்கிக் கொண்டது. அதனால் அவதிப்பட்ட ஓநாயால் எந்த உணவையும் சாப்பிட முடியவில்லை.
அவதிப்பட்ட ஓநாய் ஒரு நாரையை அணுகி, அதன் அலகால் தன் தொண்டையில் சிக்கியிருக்கும் எலும்புத் துண்டை அகற்றுமாறு வேண்டியது. அப்படி அகற்றினால் அந்த நாரைக்குச் சிறந்த பரிசு ஒன்று தருவதாகவும் கூறியது.
அதைக் கேட்ட நாரையும், தன் நீளமான அலகைக் கொண்டு, ஓநாயின் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டிருந்த எலும்பை வெளியே எடுத்து விட்டது.
அதன் பிறகு நாரை ஓநாயிடம் பரிசு கொடுக்குமாறு கேட்டது.
உடன் ஓநாய், “உனக்குத்தான் ஏற்கனவே பரிசைக் கொடுத்து விட்டேன், என்னைப் போன்ற ஓநாயின் வாயில் உன் தலையை விட்டுவிட்டு அதைப் பத்திரமாக வெளியே எடுக்க அனுமதித்தேன். அதுவே உனக்குச் சிறந்த பரிசு தான்” என்று கூறிவிட்டது.
நாரை ஏமாந்து போனது. கொடியவர்களுக்கு உதவி செய்தால் பின் அவற்றிடமிருந்து உயிர் தப்புவது கூட இயலாததாகிவிடும்.
தீயவரைக் கண்டால் ஒதுங்கிச் செல்வதே சிறந்தது.