செல்வங்கள் அனைத்தும் அளவில்லாமல் பெற்றிருந்த குபேரனுக்குத் தன்னிடம் இருந்த செல்வங்களைப் பற்றி ஒரே பெருமை. பிரபஞ்சத்தில் தன்னைப் போல் செல்வச் செழிப்புள்ளவர்கள் யாரும் இல்லை என்ற கர்வம் தலைக்கேறியது. அவன், தன்னிடம் இருக்கும் செல்வங்களை எல்லாம் சிவபெருமானை அழைத்து வந்து காட்டிப் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டும் என்று எண்ணினான்.
தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகக் கைலாயம் சென்ற குபேரன் சிவபெருமானையும், பார்வதியையும் தன் இல்லத்தில் வந்து விருந்துண்டு செல்ல வேண்டுமென்று அழைப்பு விடுத்தான்.
குபேரனது உள்நோக்கத்தைப் அறிந்து கொண்ட சிவபெருமான், “குபேரனே தற்போதைய நிலையில் என்னால் உன் வீட்டிற்கு வர முடியாது. நீ வேண்டுமானால் என் மகன் கணபதியை அழைத்துச் செல்” என்றார்.
குபேரனும் சிவபெருமான் சொன்னபடி விநாயகரைத் தன் இல்லத்திற்கு அழைத்துக் கொண்டு வந்தான். அங்கு விருந்துக்கான ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்படிருந்தன. விநாயகர் வந்து பந்தியில் அமர்ந்ததும், உணவு வகைகள் ஒவ்வொன்றாகப் பரிமாறப்பட்டன. விநாயகர் சாப்பிடத் தொடங்கினார். அவர் அப்படியே சாப்பிட்டுக் கொண்டே இருந்தார்.
குபேரன் விநாயகர் சாப்பிடுவதை ஆச்சரியத்துடனும் அச்சத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தான்.
குபேரன் அஞ்சியது போலவே, அவன் வீட்டில் சமைக்கப்பட்டிருந்த உணவுகள் அனைத்தும் தீர்ந்து போய்விட்டன. எனவே குபேரன் அருகில் இருந்த கிராமங்களில் இருந்து, உணவுகளை வரவழைத்தான். இருப்பினும், விநாயகரின் பசி அடங்கவில்லை. பசி அடங்காத விநாயகர், குபேரன் வீட்டிலிருந்த விலை மதிப்புமிக்க பொருட்களையெல்லாம் கடித்துத் தின்னத் தொடங்கி விட்டார்.
குபேரனுக்கு, இப்படியே போனால் நம் வீட்டில் எந்தப் பொருளுமே மிஞ்சாது என்ற எண்ணம் வந்துவிட்டது. விநாயகரைத் தடுக்க முயன்றான் குபேரன்.
அப்போது குபேரனிடம் விநாயகர், “நீ என் பெற்றோரிடம் என் பசியாற விருந்தளிப்பதாக வாக்களித்திருக்கிறாய். இங்கோ உணவு தீர்ந்து விட்டது, ஆனால் என் பசி தீரவில்லை. இனி சாப்பிட இங்கு ஒன்றுமே இல்லை. ஆகையால் என் பசிக்கு உன்னையே கொன்று தின்னப் போகிறேன்” என்றார்.
இதைக் கேட்ட குபேரன் அலறியபடியே கைலாயத்திற்கு ஓடினான். சிவபெருமானின் பாதங்களைப் பற்றி வேண்டினான்.
அப்போது சிவபெருமான் அவனிடம், “குபேரா, நீ உன் கர்வத்தை விட்டுவிட்டு விநாயகனுக்கு ஒரு கைப்பிடி சாதம் கொடு, அது அவனுடைய பசியை அடக்கிவிடும்” என்றார்.
தன் தவறை உணர்ந்த குபேரன் தன் கர்வத்தை எல்லாம் விட்டுவிட்டு ஒரு பிடி சாதத்தை விநாயகருக்கு அளித்தான்.
அதை உண்ட விநாயகரின் பசி அடங்கியது.
அடங்கியது விநாயகரின் பசி மட்டுமா? குபேரனின் கர்வமும்தான்!