ஒரு மன்னனின் அரசவையில் விசித்ரமான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது.
புகாரளித்தது ஒரு நாய்.
"இன்றைக்குப் பக்கத்துத் தெருவில் நான் படுத்திருக்கும் போது, என்னை ஒரு பெருங்கல்லால் ஒரு துறவி அடித்துத் துன்புறுத்தினார். இரத்தம் எப்படிப் பெருகி ஒடுகிறது பாருங்கள் மன்னா? அவரைத் தண்டித்து எனக்கு நியாயம் வழங்க வேண்டும். என்னைத் தாக்கிய துறவி இன்னும் அங்கேதான் இருக்கிறார்" என்று கண்ணீர் வடித்தது.
மன்னன் உட்பட எல்லோர் மனதையும் அந்த நாயின் கண்ணீர் தொட்டது.
மன்னனின் உத்தரவின் பேரில் துறவி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார்.
தனக்குப் போதிய இடமின்றி, அந்த நாயே முழு இடத்தையும் ஆக்ரமித்துக் கொண்டதால் சினமுற்று கல்லால் தாக்கியதைத் துறவி ஒப்புக் கொள்ள, ஒரு துறவிக்கு இத்தனை சினம் ஆகாது என்று நினைத்த மன்னன், தன் மந்திரிகளிடம் அவருக்குத் தகுந்த தண்டனை அளிக்க உத்தரவிட்டான்.
மந்திரிகளோ அந்த நாய் விரும்பும் தண்டனையை அந்தத் துறவிக்கு அளிக்கலாம் என்று ஒரே குரலில் சொல்ல நாயின் வசம் வழக்கு திரும்பியது.
"இங்கிருந்து நூறு மைல் தொலைவில் ஓர் மடாலயம் இருக்கிறது. நிரப்பப்படாதிருக்கிற அதன் தலைமைத் துறவியின் இடத்துக்கு இந்தத் துறவியை நியமியுங்கள்" என்றது நாய் தன் தீர்ப்பில்.
எல்லோர் முகத்திலும் குழப்பம்.
"அந்தத் தலைமைத் துறவி இறந்து போய் இரண்டு ஆண்டுகளாகியும் இன்னமும் அந்த இடம் நிரப்பப்படவில்லை"
அதற்கும், தண்டனைக்கும் என்ன பொருத்தம் என்ற புதிர் இன்னும் நீடித்தது.
நாய் தொடர்ந்தது.
"இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்து போன, அந்த மடாலயத்தின் தலைமைத் துறவி நான்தான். அதன் தலைமைத் துறவியாய் இருந்து மண், பொன், பெண் என்னும் எல்லாச் சுகங்களையும் அனுபவிக்காத ஒருவன் தேடினாலும் கிடைக்க மாட்டான். செய்த பாவங்களுக்கு இப்போது நாயாய்ப் பிறந்து அனுபவிக்கிறேன்"