ஒரு ஊரில் ராமசாமி என்ற ஒருவன் இருந்தான். அவன் ஒரு நாள் கிராமவாசி ஒருவன் மீது தேவையில்லாத பழி சொல்லிப் பஞ்சாயத்தைக் கூட்டினான்.
பஞ்சாயத்திலும் கிராமவாசிக்குத் தண்டனை கிடைத்தது. பின், வீட்டிற்கு வந்த அவனின் மனசாட்சி, அவனை உறுத்தியது. கிராமவாசி மீது தான் பழி சொன்னதை எண்ணி வருந்தினான். எனவே, தன் பாவத்திற்கு ஏதாவது பிராயச்சித்தம் உண்டா? என்று தேடினான்.
என்ன பிராயச்சித்தம் செய்வதென்று அவனுக்குத் தெரியவில்லை. எனவே, அவன் அந்த ஊரிலிருந்த ஒரு துறவியிடம் சென்றான். “சுவாமி, நான் இந்தக் கிராமத்தில் வசிக்கும் ஒருவர் மீது வீண் பழி சுமத்தி விட்டேன். அப்போது, எனக்கு அது குற்றமாகத் தெரியவில்லை. ஆனால், இப்போது அது என் மனத்தை உறுத்துகிறது. அந்தப் பழி சொன்ன பாவத்தில் இருந்து தப்பிக்க எனக்கு ஏதாவது நல்ல வழி இருந்தால் கூறுங்கள்” என்று கேட்டான்.
துறவி சிறிது நேரம் யோசித்துவிட்டு, “நீ... இன்று இரவு மூன்று கிலோ இலவம் பஞ்சை எடுத்துக் கொண்டு போய் அந்தக் கிராமவாசியின் வீட்டுக்கு முன்பாகப் பரப்பிப் போட்டுவிட்டு வந்து விடு. நாளை காலையில் என்னை வந்து பார்” என்று சொல்லி அனுப்பினார்.
ராமசாமியும் துறவி சொன்னபடி இரவு நேரத்தில், அந்தக் கிராமவாசியின் வீட்டின் முன்பாக இலவம் பஞ்சைக் கொண்டு போய்ப் பரப்பி விட்டான்.
மறுநாள் ராமசாமி அந்தத் துறவியைச் சென்று பார்த்தான். அவன் அவரிடம், “சுவாமி, நேற்றிரவு நீங்கள் சொன்னபடி நான் அந்தக் கிராமவாசியின் வீட்டு முன்பாக இலவம் பஞ்சைப் பரப்பிவிட்டு வந்து விட்டேன். இப்போது என் பாவம் என்னை விட்டுப் போய் இருக்குமா?” என்று கேட்டான்.
உடனே துறவி, “ராமசாமி, நீ இப்போது அந்தக் கிராமவாசியின் வீட்டிற்குச் செல். அவன் வீட்டு முன்பாக நேற்றிரவு நீ பரப்பிவிட்டு வந்த பஞ்சை மீண்டும் பொறுக்கி எடுத்துக் கொண்டு வா” என்று கூறினார்.
ராமசாமியும் துறவி சொன்னபடி அந்தக் கிராமவாசியின் வீட்டுக்குச் சென்று பார்த்தான். அங்கு அவன் பரப்பி விட்டு வந்த இலவம்பஞ்சு சிறிது கூட இல்லை. அவையனைத்தும் காற்றில் பறந்து போய் விட்டிருந்தது.
அதனைக் கண்ட அவன் திடுக்கிட்டான். மீண்டும் துறவியிடம் ஓடி வந்தான்.
“சுவாமி, நேற்றிரவு நான் அந்தக் கிராமவாசி வீட்டின் முன்னால் பரப்பிவிட்டு வந்த பஞ்சில் ஒரு துளிப் பஞ்சு கூட இப்போது அங்கு இல்லை. எல்லாம் காற்றில் பறந்து போய்விட்டது. நான் இப்போது என்ன செய்வது?” என்று கேட்டான்.
துறவி அவனைப் பார்த்து இலேசாகச் சிரித்து விட்டு, “ராமசாமி, நீ விரித்துப் போட்டுவிட்டு வந்த பஞ்சை இப்போது மீண்டும் எப்படி அள்ள முடியாதோ, அதே போலத்தான் நீ ஒருவர் மீது சுமத்திய பழியையும், அதனால் உனக்கு ஏற்பட்ட பாவத்தையும் மாற்ற முடியாது. திருப்பி வார முடியாத பஞ்சைப் போன்றது தான் உன் பழிச் சொற்களும். அவற்றையும் இனித் திருப்பி வார முடியாது. நீ உன் தவறுக்காக இறைவனிடும் மன்னிப்பு கேள்... அது ஒன்றுதான் உனக்கு இப்போதுள்ள ஒரே வழி” என்று கூறினார்.
ராமசாமிக்கு உண்மை புரிந்தது. அன்று முதல் அவன் யார் மீதும் வீண் பழி சொல்லும் குணத்தையே விட்டு விட்டான்.