வேடன் ஒருவன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான்.விஷம் தோய்ந்த அம்பு ஒன்றை விலங்கின் மீது அவன் செலுத்த அது குறிதவறி, அங்கிருந்த ஒரு பெரிய ஆலமரத்தின் அடிப்பாகத்தில் போய்த் தைத்தது.
அம்பில் இருந்த விஷத்தினால் அந்த மரம் பட்டுப் போனது. இலைகள் உதிர்ந்து காட்சியளித்தது. மரம் பட்டுப்போனாலும், அம்மரத்தில் வாழ்ந்திருந்த கிளி ஒன்று அங்கேயே தங்கி இருந்தது.
இதைக் கண்ட இறைவன் அங்கு வந்து கிளியைப் பார்த்து, "இந்தக் காட்டில் எவ்வளவோ மரங்கள் இருக்கின்றன. நீ அங்கு செல்லாமல், பட்டுப்போன இம்மரத்திலேயே ஏன் இன்னும் இருக்கிறாய்" என்று கேட்டார்.
கிளி சொல்லியது...
"இறைவனே, இம்மரத்தில் தான் நான் பிறந்து, பறந்து, ஒடியாடி மகிழ்ந்து வளர்ந்தேன். இம்மரம் பூத்துக் குலுங்கி எனக்குத் தேவையான காய்களையும், கனிகளையும் தந்தது. அவற்றை உண்டு நான் வளர்ந்தேன். என் வளர்ச்சிக்குப் பெரிய உதவி செய்த இம்மரத்தை விட்டுவிட்டு என்னால் எங்கும் செல்ல முடியாது. இம்மரம் நல்ல நிலையில் இருந்த போது அதன் பலன்களை அனுபவித்த நான், இம்மரத்திற்குக் கஷ்டநிலை ஏற்பட்ட போது அதை விட்டுப் பிரிவது நியாயமில்லை. அது செய்நன்றி மறப்பதற்கு ஒப்பாகும்” என்றது.
கிளியின் வார்த்தைகளைக் கேட்ட இறைவன் மனம் மகிழ்ந்து, கிளிக்கு வேண்டிய வரத்தைக் கேட்கச் சொன்னார்.
கிளி உடனே, "பட்டுப்போன இம்மரம் மீண்டும் தழைக்க வேண்டும். பசுமையாய்க் காய், கனிகளுடன் இருக்க வேண்டும்" என்றது.
இறைவனும் அது போல வரமளிக்க, ஆலமரம் மீண்டும் துளிர்த்துப் பசுமையுடன், காய்கனிகளுடன் காட்சி தந்தது.
எந்த ஒரு செயலை நாம் செய்ய மறந்தாலும்... ஒருவர் நமக்குச் செய்த நன்றியை மறவாது இருப்பதுடன், நமக்கு உதவி செய்தவருக்கும் நம்மாலான சேவைகளை செய்ய வேண்டும்.