மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா.
அரச சபையில் அரசருக்கு மரியாதை செலுத்துதல் நடந்தது. முதலில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசுப் பிரதிநிதிகள், தங்கள் நாட்டு மன்னர்கள் அனுப்பிய பரிசுகளைத் தந்தனர்.
பிறகு அரசுப் பிரதிநிதிகள், பொதுமக்கள், மன்னருக்குப் பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள். அதன்பிறகு அரசரின் நெருங்கிய நண்பர்கள் தங்கள் பரிசுகளை அளித்தனர்.
அப்போது பெரிய பொட்டலத்துடன் தெனாலிராமன் உள்ளே நுழைந்தான். அரசர் உள்பட எல்லாரும் அதை வியப்புடன் பார்த்தனர்.
மற்றவர்களிடம் பரிசுகளை வாங்கித் தன் அருகே வைத்த மன்னர், தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரியதாக இருந்ததால், அவையிலுள்ளவர்கள் ஆவலோடு அது என்ன பரிசாக இருக்கும் என்று யோசித்தனர்.
அரசர் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் சொன்னார்.
தெனாலிராமன் உடனே அந்தப் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக் கொண்டே இருந்தான். அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கப் பிரிக்கத் தாழை மடல்கள் காலடியில் சேர்ந்து கொண்டிருந்தன. அதில் என்ன பரிசுப் பொருள் இருக்கிறதென்று தெரியவில்லை.
அதனால் எல்லாரும் ஆவலுடன் அதைக் கவனித்துக் கொண்டிருந்தனர். கடைசியில் மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது.
இதைப் பார்த்த அவையினர் தெனாலிராமனைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தனர்.
அரசர் அவையினர் சிரிப்பு அடங்கியவுடன், "தெனாலிராமன் கொடுத்த பரிசு சிறிதாக இருக்கலாம். அதற்கு அவன் கொடுக்கப் போகும் விளக்கம் பெரிதாக இருக்கலாம்'' என்றார். பின்னர் அவர் தெனாலிராமனைப் பார்த்து, "ராமா, எனக்குப் பிறந்தநாள் பரிசாக இந்தச் சிறிய பொருளைத் ஏன் கொண்டு வந்தாய்?'' என்று கேட்டார்.
"அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும். அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்தப் புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும்போல இருங்கள்!'' என்றான்.
அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
மன்னர் தனது இருக்கையை விட்டு எழுந்து தெனாலிராமனைத் தழுவி, "ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை. பொக்கிஷப் பணமும், பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே இந்த விழாவினை நிறுத்துங்கள். இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனை செய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது'' என உத்தரவிட்டார்.
தெனாலிராமனின் துணிச்சலையும் சாதுரியத்தையும் எல்லாரும் பாராட்டினர்.
அரசர் தனக்கு வந்த பரிசுப் பொருள்களில் விலை உயர்ந்தவற்றைத் எடுத்து தெனாலிராமனுக்குப் பரிசாகத் தந்தார்.