கிரேக்க நாட்டில் 'டிமீட்டர்' என்ற தேவதை வாழ்ந்து வந்தாள். அவளுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அவளை மிகவும் அன்புடன் வளர்த்துப் பாதுகாத்து வந்தாள் டிமீட்டர். வயதுக்கு வந்த பெண் அங்கும் இங்கும் ஓடியாடித் திரிந்தாள். அப்போது இளமை எழிலுடன் இருந்த 'பெர்சிபோன்' என்ற பெயர் கொண்ட அந்தப் பெண்ணைப் பாதாளத்தில் இருந்த மன்னன் பார்த்தான். அவள் அழகிலும் துடிப்பிலும் மயங்கியவன் அவள் மீது காதல் கொண்டான். ஒரு நாள் அவள் ஏமாந்து இருந்த நேரத்தில் அவளைப் பாதாளத்துக்குள் இழுத்துக் கொண்டு போய் அவளை மணந்து கொண்டான்.
அவளைப் பாதாளத்துக்குள் இழுத்துக் கொண்டு போனபோது அவள் கதறினாள். அவள் கதறலைக் கேட்ட அவள் தாயாரான 'டிமீட்டர்' அவளை காப்பாற்ற ஓடின போது அவள் மறைந்து விட்டாள். ஆகவே தன்னுடைய பெண்ணைத் தேடிக் கொண்டு கையில் ஒரு விளக்குடன் இரவு பகல் எனப் பார்க்காமல் 'டிமீட்டர்' அனைத்து உலகிலும் செல்லத் துவங்கினாள்.
சுமார் ஒன்பது நாட்களாக பசி, தூக்கம், துணியை மாற்றிக் கொள்ளுதல் என அனைத்தையும் துறந்தவள் தனது மகளைத் தேடி அலைந்தாள். அப்போது அவள் அலைந்து திரிந்து கொண்டு இருந்ததைக் கண்ட கடல் தேவன் அவளை வஞ்சகமாக அடைந்தான். அவனிடம் இருந்து தப்பிக்க அவள் குதிரையின் உருவம் எடுக்க கடல் தேவனும் ஆண் குதிரையின் வடிவம் எடுத்து அவளை பின் தொடரலானான். அதில் வெற்றியும் பெற்றான். அது முதல் அவளை தன் வசம் வைத்துக் கொண்டாலும் 'டிமீட்டர்' தனது மகளைத் தேடுவதை நிறுத்தவில்லை.
அந்த நேரங்களில் அவள் பல இடங்களிலும் பல அற்புதங்களை செய்து கொண்டு போனாள். பேச முடியாமல் முடங்கிக் கிடந்த குழந்தையை தொட்டு அவளை நல்ல நிலைக்கு ஆளாக்கினார். தன்னைக் கேலி செய்தவனைப் பல்லியாக மாற்றினாள். அவளை அனைவரும் தெய்வப் பிறவியாகவே பார்க்கலாயினர்.
இப்படியாக அலைந்து கொண்டு இருந்தவளை ஒரு நாள் வழியில் சந்தித்த ஒரு தேவதை வானத்திலே உள்ள சூரிய பகவான், யார் எங்கு போனார்கள் என்பதை அறிந்து இருக்க முடியும் என்பதால் சூரிய பகவானின் உதவியை நாடி அவளுடைய மகள் எங்கு சென்று இருக்க முடியும் என்பதைக் கண்டு பிடிக்குமாறு அவளை அறிவுறுத்தினாள்.
அதைக் கேட்டவள் சிறிதும் தாமதிக்காமல் வானத்தில் பறந்து சென்று சூரிய பகவானிடம் தன்னுடைய மகளைப் பற்றிக் கேட்க அவரும் அவளிடம் நடந்த உண்மைகளைக் கூறி அவளுடைய மகள் பாதாளத்துக்குள் இருக்கின்றாள் என்ற சேதியைக் கூறினார். அதற்கு மேலும் அவளுடைய கணவனே அந்த பாதாள மன்னனுக்கு உடந்தையாக இருந்தார் என்றும் கூறினார். கோபமுற்ற 'டிமிட்டர்' தன்னுடைய மகள் தனக்கு கிடைக்காதவரை இந்த பூமியில் விளையும் அனைத்து உணவுப் பொருட்களும் அழிய வேண்டும் என சாபமிட பயிர்கள் வாடி வதங்கின. அவள் பூமியின் தேவதையாகவும் இருந்ததினால் அனைத்துப் பயிர்களையும் வாட விட்டாள். நாட்டில் பஞ்சம் ஏற்படத் துவங்கியது.
அதனால் நாடு திகிலடைய அவளுடைய கணவன் ஓடோடி வந்து அவளிடம் தனது முட்டாள்தனத்திற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். பயிர்கள் விளைய உதவுமாறு கேட்டான். ஆனால் அவளோ முதலில் தனது மகளை கண்டவுடன்தான் அவற்றைச் சரி செய்வேன் என பிடிவாதமாக மறுத்து விட்டதால் உடனே தன்னுடைய மகளை மேல் உலகிற்கு அனுப்பி வைக்குமாறு பாதாள மன்னனுக்கு செய்தி அனுப்பினான்.
ஆனால் பாதாளத்துக்குள் சென்று திருமணம் செய்து கொண்டு பாதாளவாசியாக 'பெர்சிபோன்' மாறி விட்டதினால் அவளால் பூமியில் சென்று வாழ முடியாது. பூமிக்குச் சென்றால் சில மாதங்களே வாழ முடியும். அதுவும் வேறு ரூபத்தில்தான் இருக்க முடியும். அதன் பின் அவள் பூமியில் தானாக இழுக்கப்பட்டு விடுவாள். அப்படி ஒரு ஏற்பாட்டை அவளுடைய கணவன் செய்து விட்டான். அவளுடைய கணவன் அவளுக்கு மாதுளம்பழ விதைகளை தந்து அதை சாப்பிடுமாறு கூறினான். அதை உண்டால் சில காலம் அவளால் மேல் உலகில் இருக்க முடியும் என்று கூறி அவளை அனுப்பினான்.
அவளும் வேறு வழி இன்றி ஒரு செடியின் உருவத்தில் பூமிக்கு வந்து தனது தாயாரை சந்தித்தாள். 'டிமேடேருக்கு மகளை சந்தித்தது ஆறுதலாக இருந்தது. ஆனால் அவளால் அவளுடைய சுய ரூபத்தில் இருக்க முடியாது, நடந்து விட்டவை மாற்ற முடியாதவை என்பதை உணர்ந்த 'டிமீட்டர்' வேறு வழி இன்றி வருடத்துக்கு நான்கு மாதமாகவாவது தன்னுடைய மகள் தன்னுடன் இருக்க வேண்டும் என்பதினால் அவளை உண்ணும் தானியமாக வந்து பூமிக்கு மேல் தங்கி இருக்குமாறு கூறினாள்.
'டிமெடேரின்' சாபத்தினால் அழிந்துவிட்ட மற்ற உணவு தானியங்களுக்கு பதிலாக 'பெர்சிபோன்' உணவு தானியமாகத் தனது பாதாள மக்களுடன் பூமிக்கு வந்து தங்கிச் சென்றாள். போகும் முன் அந்தத் தானிய உருவை இழந்து விட்டுச் செல்ல வேண்டி இருந்தது. இப்படியாக உருவானதே அரிசி, கோதுமை போன்ற தானியங்கள். அவளுடன் வரும் அவள் பரிவாரங்கள் பூமியில் தங்கி தமது உடல்களில் இருந்து பூவை வெளிப்படுத்தி அதை தானியமாக்கி பூமியில் விட்டுச் செல்ல வேண்டி வந்தது. அந்தப் பூவும் காய்களுமே அரிசி நெல் மற்றும் கோதுமை போன்ற பல உணவு தானியம் ஆயிற்று.
இப்படியாக தான் சாபமிட்டு அழித்த உணவுச் செடிகளுக்குப் பதிலாக அரிசி மற்றும் கோதுமை தானியத்தை பூமியில் தோன்றக் காரணம் ஆனவளே 'டிமீட்டர்'. அதனால் பூமியில் உள்ள அனைவரும் 'டிமேடேரை' உணவு தானியம் தரும் தாயாகப் போற்றி வணங்கினார்கள். அவளும் அந்தப் பயிர்களை எப்படிக் காப்பது, எப்படி வளர்ப்பது, எப்படி அவற்றின் இனப் பெருக்கத்தைச் செய்வது போன்ற அனைத்தையும் பூமியில் இருந்தவர்களுக்குக் கற்றுத் தந்தாள். அந்தப் பயிர்களைக் காத்து வந்தாள். இப்படியாகத்தான் 'டிமிட்டர்' நிலவளத்தைக் காக்கும் தேவியாக மாறினாள்.