பேராசிரியர் ஒருவர் ஜென் ஞானியிடம் சென்று, “நான் ஏன் உங்களைப்போல இல்லை?உங்களைப் போல என்னால் ஏன் அமைதியாய் இருக்க முடியவில்லை?உங்களுக்கு இருக்கும் அறிவு எனக்கு ஏன் இல்லை?” என்று கேட்டார்.
ஞானி, “இன்று முழுவதும் என்னுடன் இருந்து என்னைக் கவனித்து வாருங்கள். எல்லோரும் சென்றவுடன், தங்களின் கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன்” என்றார்.
அன்று அந்த ஞானியைப் பலரும் வந்து பார்த்து, அவரிடம் ஆசி பெற்றுச் சென்று கொண்டிருந்தனர்.
மாலையில் அனைவரும் சென்ற பின்பு, பேராசிரியர் ஞானியிடம் தன் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டுமாய் நினைவு படுத்தினார்.
அன்று முழு நிலவு நாளாக இருந்ததால் நல்ல வெளிச்சமாக இருந்தது.
ஞானி கேட்டார், “பேராசிரியரே, இன்னுமா தங்களுக்குப் பதில் கிடைக்கவில்லை? நான் மக்களுக்குச் சொன்ன பதில்களை எல்லாம் கவனித்திருந்தாலே தங்களுக்குத் தேவையான பதில் கிடைத்திருக்குமே... பரவாயில்லை, வெளியில் வா. இந்த அமைதியான தோட்டத்தில் முழு நிலவின் அழகினைப் பார். இந்த நிலவொளியில் இந்த நீண்ட மரமும் அதன் அருகில் உள்ள செடியும் எவ்வளவு அழகாய் இருக்கின்றன?” என்றார்.
பொறுமை இழந்த பேராசிரியர், தனது கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லுங்கள் என்று கேட்டார்.
ஞானி, “உன் கேள்விக்கு நான் நேரடியாகவே பதில் சொல்கிறேன். இந்த நீண்ட மரமும், அதன் அருகில் உள்ள செடியும் வெகு நாட்களாக என் தோட்டத்தில் இருக்கின்றன. ஆனால், ஒரு நாளும் இந்தச் செடி தான் ஏன் இந்த பெரிய மரம் போல இல்லை என்று அந்த மரத்திடம் கேட்டதில்லை. அதேபோல, அந்த மரமும் அந்தச் செடியிடம் தான் ஏன் செடி போல இல்லை என்றும் கேட்டதில்லை. மரம் தான் மரமாயிருப்பதிலும், செடி, தான் செடியாயிருப்பதிலும் மகிழ்ச்சியுடன்தான் இருக்கின்றன. அவை தன்னை மற்றவைகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை. மனிதனின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூல காரணமாக இருப்பதே இந்த ஒப்பீடுதான்” என்றார்.
பேராசிரியருக்கு உண்மை விளங்கியது.