ஒரு சிறு கிராமத்தை நோக்கிப் பண்டிதர் ஒருவர் மாட்டு வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த மாட்டு வண்டிகாரனிடம் அந்தப் பண்டிதர், “ஐயா, இந்த ஊரில் பண்டாரம் பிள்ளை என்ற ஒரு வள்ளல் இருந்தாரே, அவர் எப்படி இருக்கிறார்?” என்று கேட்டார்.
அதற்கு வண்டிக்காரன், “அவர் இறந்து நெடுநாட்களாகி விட்டன” என்றான்.
பின்னர் அவன், “ஐயா, அவரைப் பற்றி விசாரிக்கிறீர்களே... ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டான்.
அந்தப் பண்டிதர் தன் கண்களில் கண்ணீர் வழிவதைத் துடைத்துக் கொண்டு, ஏழையாகப் பிறந்த எனக்குப் படிக்கப் பணம் கொடுத்த வள்ளல் அவர். அவரால்தான் எனக்கு இந்த வாழ்க்கை கிடைத்தது” என்று கூறி அழுதார்.
அந்த ஊர் வந்தவுடன் கீழே இறங்கிய பண்டிதர், தான் பேசிய வாடகையை வண்டிக்காரனிடம் எடுத்து நீட்டினார்.
உடனே அந்த வண்டிக்காரன், “பணம் வேண்டாம் ஐயா” என்றபடி கிளம்பத் தயாரானான்.
அதற்கு அந்தப் பண்டிதர், “ஏன் வேண்டாம் என்கிறாய்?” என்று கேட்டார்.
அதற்கு வண்டிக்காரன், “ஐயா, நான் நீங்கள் கேட்ட பண்டாரம் பிள்ளையோட பேரன்தான். இப்போ எங்கள் வாழ்க்கை நொடிஞ்சு ஏழையாய் போய்ட்டோம். மிச்சம் இருக்கிற இந்த மாடும் வண்டியும் தாங்க எங்களுக்குச் சோறு போடுகிறது. இருந்தாலும், எங்க தாத்தா கொடுத்து வளர்ந்தவங்க நீங்க... உங்ககிட்டக் கூலி வாங்கினால், கொடுத்த இடத்தில திருப்பி வாங்கின குற்றம் வந்துவிடும். நாங்கள் கொடுத்த இடத்தில் இருந்து எதையும் கேட்டு வாங்குவது இல்லைங்க” என்று கூறிக்கொண்டே வண்டியை எடுத்தான்.
பண்டிதர் வண்டிகாரனைப் பெருமையுடன் பார்த்தார்.