ஒரு பக்கம் உப்பு மூட்டை மூட்டையாக அடுக்கப்பட்டிருந்தது. மறுபக்கம் சர்க்கரை மூட்டைகள் இரண்டும் ஈரக்கசிவோடு இருந்தன.
குப்புசாமி தலையில் வைத்துக் கொண்டு, ஈரக்கசிவான மூட்டைகளை எப்படி விற்பதென்று கவலையோடு இருந்தார்.
இதைப் பார்த்த அவர் நண்பர் ரங்கசாமி, “என்ன குப்புசாமி, ஏன் கவலையாக இருக்கிறாய்? என்ன விசயம்? என்று கேட்டார்.
குப்புசாமி விசயத்தைக் கூறியதும், “இதற்காகவா, கவலைப்படுகிறாய், அரசாங்க நியாய விலைக் கடைக்குப் போய் அங்கு உன் மூடைகளைத் தள்ளி விடு. அவர்கள் எப்படியிருந்தாலும் மக்களிடம் தள்ளிவிட்டு விடுவார்கள்...” என்றார் ரங்கசாமி.
இவர்கள் பேச்சைக் கேட்ட சர்க்கரையும், உப்பும் தங்கள் நிலைமை இப்படியாகி விட்டதே, தாங்கள் மக்களுக்குப் பயனற்றுப் போய்விட்டோமே... என்று நினைத்து வருந்தினர்.
அவையிரண்டும், தங்களை உற்பத்தி செய்த கரும்பு, கடலிடம் சென்று, தாங்கள் பயனற்றுப் போனதைச் சொல்லி முறையிட முடிவு செய்தன.
சர்க்கரை கரும்பிடம் சென்று முறையிட்டது.
அதைக் கேட்ட கரும்பு, சர்க்கரையைப் பார்த்து, “நீ என்ன உப்பா? உன்னைக் கரிச்சுக் கொட்டப் போகிறார்கள்...? கல்யாணம் மற்றும் அனைத்து விழாக்களிலும் நீ இல்லாமலா...? குழந்தைகள் பிறந்தாலும் உன்னைத்தான் முதலில் கொடுப்பார்கள். தெய்வப் பிரசாதமாகிய சர்க்கரைப் பொங்கலிலும் உன் சகோதரன்தான். ஒரு நல்ல செய்தி சொல்லக் கூட, அவன் வாயில் சர்க்கரையைப் போடுங்கள் என்றுதான் சொல்வார்கள். மிகப்பெரிய விலங்கான யானைக்குப் பிடித்ததும் கரும்புதான், அன்னை கையில் வைத்திருப்பதும் கரும்புதான். கரும்பில்லாமல் பொங்கல் விழா இல்லை... எனவே நம் குடும்பம் பல வழிகளிலும் நல்ல பெயருடன் இருக்கிறது... நீ எதையும் நினைத்துக் கவலைப்படாதே...” சென்று வா என்று சொன்னது.
இதைக் கேட்ட கடல் ஆத்திரத்தில் பொங்கியது. “டேய், உப்பு, என்ன யோசிக்கிறாய்? நீ இல்லாமல் ஒரு பண்டமுண்டா? உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்றுதான் சொல்வார்கள். சாம்பாராகட்டும், ரசமாகட்டும், மசாலா, பொறியல் என்று எதுவானாலும் நீ இல்லாவிட்டால் வாயில் வைக்க முடியுமா? ஊறுகாய்க்கும் உப்பு, உடல் அடக்கத்திற்கும் உப்புதான். உங்கள் உப்பைத் தின்னவன் உங்களுக்குத் துரோகம் நினைப்பானா என்று சொல்கிறார்களே... ஏன்? நன்றிக்கு நீதான் உதாரணம். உப்பு சப்பில்லாத சாப்பாடு மட்டுமில்லை உப்பு சப்பில்லாத தகவலும் உதவாது என்று சொல்வார்கள்... உடல் நலம் வேண்டும் பக்தர்கள் தங்கள் நோய் குணமாக கடவுளிடம் வேண்டிக் கொண்டு உப்பு போடுகிறார்களே... உப்பே நீ எதைப் பற்றியும் கவலைப்படாதே...” என்றது கடல்.
ஒரு நாள் குப்புசாமி தள்ளாடியபடி வீட்டில் நுழைவதைப் பார்த்த அவன் மனைவி, “ஏங்க, ஏன் ஒரு மாதிரி இருக்கிறீர்கள்? என்று கேட்டாள்.
“என் காலில் வந்த புண் ஐந்து நாட்களாகியும் ஆறவில்லையே என்று மருத்துவரிடம் போனேன், அவர் என்னைப் பரிசோதித்துப் பார்த்து, எனக்குச் சர்க்கரை வியாதி இருப்பதாகச் சொன்னார். நான் இனிமேல் இனிப்பு சாப்பிடக் கூடாதாம். அப்போதுதான் விரைவில் என் புண் குணமாகும்” என்று சொல்லிப் புலம்பினார் குப்புசாமி.
”அட, இதுக்குத்தானா கவலைப்படுகிறீர்கள்... நாளையிலிருந்து உங்களுக்குச் சர்க்கரையை ஒதுக்கி விடுகிறேன்” என்று சமாதானப்படுத்தினாள் அவர் மனைவி.
இதைக் கேட்ட உப்பிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அது சர்க்கரையை ஏளனமாகப் பார்த்தது.
அப்போது ரங்கசாமி அங்கு வந்தார். அவரிடம் தனக்கு சர்க்கரை வியாதி வந்திருப்பதைப் பற்றிச் சொன்னார் குப்புசாமி.
அதைக் கேட்ட ரங்கசாமி கண்ணீர் விட்டபடி, “உன்கதை பரவாயில்லை, என் கதை உனக்குத் தெரியுமா? நான் நேற்று வீட்டில் திடீரென்று மயங்கி விழுந்து விட்டேன். என் வீட்டிலிருப்பவர்கள் என்னை டாக்டரிடம் அழைத்துப் போனார்கள். அங்கிருந்த மருத்துவர் என்னைப் பரிசோதித்துப் பார்த்து விட்டு எனக்கு இரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதாகச் சொல்லி விட்டார்கள். கொழுப்பு வேறு அதிகமாகி விட்டதாம். உடனே நான் சாப்பாட்டில் உப்பைக் குறைக்க வேண்டுமாம் அல்லது உப்பே சேர்க்காமல், தவிர்க்க வேண்டுமாம்” என்று சொல்லி அழத் தொடங்கினார்.
இதைக் கேட்ட சர்க்கரை உப்பைப் பார்த்துச் சிரித்தது.
சர்க்கரையும், உப்பும் ஒன்றையொன்று பார்த்து, “நம்மைப் பற்றி நாமே பெருமையாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். நம்மைப் பார்த்த இறைவன், நம்மைப் பெரிதாக நினைக்கக் கூடாது என்று மனிதர்களுக்கு, நம்மை வைத்தே நோயைக் கொடுத்து, நம் பெருமையைக் குறைத்து விட்டார்” என்று சொல்லிக் கொண்டன.
அளவுக்கு அதிகமானால், எதுவும்... விசம்தான் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.