முன்னொரு காலத்தில் வட இந்தியாவில் மதுரா நகரத்தில் உபகுப்தர் என்பவர் பலசரக்கு வியாபாரம் செய்து வந்தார். அந்த ஊரில் வாசவதத்தை என்னும் ஒரு விலைமாது இருந்தாள். அவளுடைய வேலைக்காரி ஒரு நாள் உபகுப்தர் கடைக்கு வந்து வாசனைத் திரவியங்களை வாங்கிச் சென்றாள்.
உபகுப்தரின் கட்டழகைக் கண்டு வியந்து தன்னுடைய எஜமானியான வாசவதத்தையிடம் அவருடைய உருவ அழகை வருணித்துச் சொன்னாள். அதைக் கேட்டது முதல் வாசவதத்தையின் மனம் சஞ்சலம் அடைந்தது. நாளாக ஆக வாசவத்தையின் ஆவலும் ஆசையும் அதிகரித்தது.
ஒருநாள், “உங்களுடைய முக தரிசனத்துக்காக நான் ஏங்குகிறேன்” என்று ஒரு காதல் கடிதம் ஒன்றை எழுதி அதை வேலைக்காரி மூலம் உபகுப்தருக்கு அனுப்பி வைத்தாள்.
“நானோ ஒரு ஏழை; என் முக தரிசனத்தினால் உனக்கு ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் நானே ஒரு நாள் உன்னைப் பார்க்கவரும் நிலை வரும்” என்று பதில் சொல்லி அனுப்பிவிட்டார்.
வாசவதத்தையின் மனம் அடங்கவில்லை. மீண்டும் ஒரு கடிதம் எழுதி அனுப்பினாள். “உங்களுடைய காசு, பணம் எதையும் நான் எதிர்பார்க்கவில்லை. உங்கள் முகத்தைக் கண்டு களிக்கும் வாய்ப்பு மட்டும் கொடுத்தால் போதும் என்று வேண்டுகிறேன். வேறு எதுவுமே எனக்கு வேண்டாம்” என்று அதில் எழுதியிருந்தாள்.
அவர் அதை வாசித்துவிட்டுப் பழைய பதிலையே சொல்லித் திருப்பி அனுப்பினார்.
காலம் உருண்டோடியது.
மதுரா நகரத்தில் ஒரு பெரிய கொலை நடந்தது. வாசவதத்தையின் காதலன் அவளுடைய வீட்டில் ரத்தவெள்ளத்தில் மிதந்தான். ஊர் முழுதும் செய்தி காட்டுத் தீ போல பரவியது. அரசனுடைய சேவகர்கள் வந்து, கொஞ்சமும் விசாரிக்காமல், அவள் விலை மாது என்பதால் பணத்துக்கு ஆசைப்பட்டுக் காதலனைக் கொன்றுவிட்டதாக அரசனிடம் கூறிவிட்டனர்.
பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வழக்கம் அப்போது வழக்கத்தில் கிடையாது. ஆகையால் மன்னனும் இவளுடைய அங்கங்களை சிதைத்து அவலட்சணமாக்கி ஊரை விட்டு வெளியே விரட்டி விடுங்கள் என்று கட்டளையிட்டான். வாசவதத்தை என்னும் பேரழகி, அங்கம் சிதைந்த நிலயில் கோரமாகக் காட்சி தந்தாள். ஊரைவிட்டு வெளியேற்றப்பட்டதால் சுடுகாட்டில் வசித்தாள். என்றும் விசுவாசம் மாறாத வேலைக்காரி மட்டும் அவளுடனே சென்று, வாசவதத்தைக்குத் துணையாகச் சுடுகாட்டில் வசித்தாள்.
இந்தச் செய்தி பலசரக்கு வியாபாரி உபகுப்தரின் காதையும் எட்டியது. உடனே அவர் கடையில் வேலை பார்க்கும் ஊழியரை அழைத்துக் கொண்டு சுடுகாட்டுக்கு வந்தார். வாசவதத்தையின் வேலைக்காரி, உபகுப்தரை அடயாளம் தெரிந்து கொண்டு, வாசவதத்தைக்கு இன்னாரென்று அறிமுகம் செய்து வைத்தாள். அங்கமெல்லாம் உருக்குலைந்த நிலையில் உபகுப்தரைச் சந்திக்கும் துர்பாக்கியம் ஏற்பட்டதே என்று மனம் கலங்கி கண்ணீர் வடித்தாள். துக்கமும் வெட்கமூம் அவளை வாட்டி வதைத்தது.
உபகுப்தரோ, கொஞ்சமும் தயக்கமின்றி வாசவதத்தையின் அருகில் போய் அமர்ந்தார்.
“சுவாமி, இந்த உடலானது அழகாய் இருந்தபோது உங்களைப் பார்க்க விரும்பினேன்; விலையுயர்ந்த ஆடை, அணிகலன்களை அணிந்து கொண்டு காண்போர் மனதை எல்லாம் கவர்ந்தேன்; இப்பொழுது துரதிருஷ்டமும், கஷ்டமும் என்னை வந்து சேர்ந்திருக்கின்றன. அப்போதெல்லாம் என்னைப் பார்க்காமல் இப்பொழுது வந்திருக்கிறீர்களே; இப்போது வெறுக்கத்தக்க உடல் கொண்டவளாகி விட்டேனே” என்று வருந்திச் சொன்னாள்.
இதையெல்லாம் கேட்ட உபகுப்தர் கண்களிலும் கண்ணீர் வழிந்தது. பிறகு அவர் நிதானமாக, “வாசவதத்தாய்! உன்னைப் பார்க்க இதுவே உரிய தருணம். மானிடர் அனுபவிக்கும் இம்மைச் சுகங்களெல்லாம் அழியக்கூடியது என்பதை உன் மூலம் அறிந்து கொண்டேன். இனி வருந்திப் பயனில்லை. தர்மத்தைக் கடைப்பிடித்து வாழ்க்கை நடத்து; மன நிம்மதி கிடைக்கும்” என்று உபதேசம் செய்தார்.
அவருடைய வாக்கைக் கேட்ட அவள் பெரும் ஆறுதல் அடைந்தாள். அதன் பின்னர், அவள் புத்த சங்கத்தை நாடிச் சென்று இறுதி வரை பௌத்தக் கொள்கைகளைக் கடைப்பிடித்து உயிர் நீத்தாள்.