ஒருமுறை நாரதர் வைகுண்டத்திற்குச் சென்று கொண்டிருந்தார். அந்த வழியில் வேதங்கள் அனைத்தையும் பயின்ற ஒரு அந்தணரைச் சந்தித்தார்.
நாரதரை வணங்கிய அந்தணர், “சுவாமி, தாங்கள் எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் அறிந்து கொள்ளலாமா?” என்று கேட்டார்.
அதைக் கேட்ட நாரதர், “நான் இறைவன் நாராயணனைப் பார்க்கச் சென்று கொண்டிருக்கிறேன்” என்று சொன்னார்.
அந்தணர், “தாங்கள் இறைவனைப் பார்க்கும் போது, நான் எப்போது வீடு பேறு அடைவேன் என்று அவரிடம் கேட்டு வந்து சொல்லுங்களேன்...” என்றார்.
நாரதரும், “அந்தணரே, நான் இறைவனிடம் உங்கள் கேள்விக்கான பதிலைக் கேட்டு வந்து சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
சிறிது தொலைவு சென்ற பின்னர், ஒரு மரத்தடியில் செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவரைப் பார்த்தார்.
அவரும், நாரதர் எங்கே செல்கிறார் என்பதையறிந்து கொண்டு, அவரும் அந்தணரைப் போலவே, தனது வீடுபேறு அடையும் நாளைக் கேட்டு வரும்படி சொன்னார்.
இருவருடைய வேண்டுகோளையும் கேட்டுக் கொண்ட நாரதர், அதன் பிறகு வைகுண்டம் சென்றடைந்தார்.
வைகுண்டத்திற்குச் சென்று இறைவனை வணங்கிய நாரதர், தான் வரும் வழியில் சந்தித்த இருவரைப் பற்றியும், அவர்களிருவரும் வீடு பேறு அடையும் நாள் எப்போது என்று கேட்டு வரச் சொன்னதையும் தெரிவித்தார்.
சிறிது நேரம் கண்ணை மூடித் திறந்த நாராயணன், “செருப்பு தைக்கும் தொழிலாளி இந்தப் பிறவி முடிந்ததும் வீடு பேறு அடைந்திடுவார். அந்த அந்தணர் தற்போது வீடு பேறு அடையும் வாய்ப்பு இல்லை. அவர் இன்னும் பல்வேறு பிறவிகள் எடுக்க வேண்டியிருக்கும்” என்றார்.
இதைக் கேட்ட நாரதருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
உடனே நாரதர், “இறைவனே, வேதங்களை நன்கு கற்றறிந்த அந்தணர், ஆச்சாரமாக வாழ்ந்து வருபவர். அவருக்கு முன்பாக, ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி விரைவாக வீடு பேறு அடைந்து விடுவார் என்று சொல்கிறார்களே... எப்படி என்று எனக்குப் புரியவில்லை, எனது சந்தேகத்தைத் தீர்த்து வைப்பீர்களா?” எனக் கேட்டார்.
அதைக் கேட்டுச் சிரித்த இறைவன் நாரதரிடம், ஒரு ஊசியைக் கொடுத்து, “நீ செல்லும் வழியில் அவர்களைச் சந்திக்கும் பொழுது, அவர்கள் உன்னிடம் நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்று கேட்பார்கள். அப்போது, அவர்களிடம் நான் இந்த ஊசியின் காது வழியாக ஒரு யானையை நுழைக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன் என்று சொல். அதற்கு அவர்கள் எந்த மாதிரியான பதில் சொல்கிறார்கள் என்று பார்த்தாலே உன் சந்தேகம் தீரும்” என அனுப்பி வைத்தார்.
நாரதர் திரும்பி வந்து கொண்டிருந்தார். வரும் வழியில் அந்தணரைக் கண்டார். நாரதரைக் கண்டதும் மகிழ்ந்த அந்தணர், “வைகுண்டத்தில் இறைவனைச் சந்தித்தீர்களா? அங்கு நீங்கள் செல்லும் பொழுது, அவர் என்ன செய்து கொண்டிருந்தார்?” என்று கேட்டார்.
நாரதரும் இறைவன் சொன்னபடி, “நான் வைகுண்டம் சென்ற போது, இறைவன் இந்த ஊசியின் காது வழியாக ஒரு யானையை நுழைக்க முயன்று கொண்டிருந்தார்” என்றார்.
அதற்கு அந்தணர், “சுவாமி, என்னால் இதை நம்ப முடியவில்லை, இந்த ஊசியின் காதில் பெரிய உருவமான யானை எப்படி நுழைய முடியும்?” என்றார்.
சிரித்துக் கொண்டே அவரிடமிருந்து விடைபெற்ற நாரதர், அடுத்து செருப்பு தைக்கும் தொழிலாளியைச் சந்தித்து அதையே சொன்னார்.
அதைக் கேட்டதும், “என் இறைவன் எல்லாம் அறிந்தவன். அவன் வல்லமையுடையவன், அவனால் இந்த சிறிய ஊசியின் காதில் யானையை நுழைக்க முடியும்” என்று சொல்லி மகிழ்ச்சி அடைந்தார்.
இதைப் பார்த்த நாரதருக்கு மிகப்பெரும் ஆச்சரியம்.
“ஐயா, நான் சொல்வதை அப்படியே நம்புவதா? எதை வைத்து யானையை ஊசியின் காதில் நுழைக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?” என்று திரும்பக் கேட்டார்.
அதைக் கேட்ட அந்த தொழிலாளி, “ஐயா, யானை என்ன பெரிய யானை, அதை விட பல மடங்கு பெரியதைக் கூட ஊசியின் காதை விட சிறிய துளையிலும் கூட என் இறைவனால் நுழைக்க முடியும்” என்றார்.
மேலும் வியந்துபோன நாரதர், “எப்படி?” எனக் கேட்டார்.
ஆலமரத்தடியின் கீழே இருந்த அந்தத் தொழிலாளி, அங்கே கிடந்த ஆயிரக்கணக்கான ஆலமரத்தின் பழங்களில் ஒன்றை எடுத்து அதிலிருந்த கடுகினும் சிறிய விதையைக் காண்பித்து, “இதோ, நான் தினமும் இங்கு வந்து அமர்கிறேன். இந்த ஆலமரத்தைப் பாருங்கள், இவ்வளவு பெரிய மரத்தையே இவ்வளவு சிறிய விதையினுள் வைக்க முடிந்த இறைவனுக்கு, யானையை ஊசியின் காதில் நுழைப்பது ஒன்றும் பெரியதில்லை...” என்று சொன்னார்.
இதைக் கேட்ட நாரதரின் சந்தேகம் முற்றிலும் தீர்ந்தது.