வழிப்போக்கன் ஒருவர் பாலைவனம் போன்றதோர் இடத்தை தாண்டிச் செல்ல வேண்டி இருந்தது. ஊரைச் சுற்றி ஒரே வறட்சி நிலவிக் கொண்டிருந்தது. அப்போது அவருக்குத் தண்ணீர் தாகம் எடுக்கவே, தண்ணீரைத் தேடிப் பயணம் செல்ல வேண்டி இருந்தது.
அப்போது அங்கு ஒரே ஒருவனுடைய நிலம் மட்டும் பச்சை பசேல் என்று காட்சி அளித்தது.
உடனே அந்த வழிப்போக்கன் அங்கு சென்று கிணற்றில் நீர் இறைத்து கொண்டு இருந்தவனிடம் தண்ணீர் கேட்டு பருகினான்.
உடனே அந்த வழிப்போக்கன் அவருக்கு நன்றி என்று கூறிவிட்டு, ஊரே வறட்சியில் இருக்கும் போது, உன்னுடைய நிலம் மட்டும் இப்படி பச்சைப் பசேல் என்று இருக்கிறது என்றால் உனக்கு இறைவனின் கொடை அதிகம் இருக்கிறது என்று சொன்னான்.
உடனே அந்த விவசாயி, “ஐயா இந்த நிலமும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இந்த ஊரைப் போன்று வறண்டு தான் கிடந்தது. என்னுடைய கடுமையான முயற்சியாலும், உழைப்பாலும்தான் இந்த இடம் இப்படிப் பச்சைப்பசேலென்று மாறியிருக்கிறது” என்று பணிவாகச் சொன்னான்.
அதைக் கேட்டு வியப்படைந்த வழிப்போக்கன், “நீங்கள் சொல்வதைக் கேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றான்.
உடனே அவன், “ஐயா, நான் இந்த நிலத்தைச் சீர் செய்த போது, இந்த நிலம் மட்டும் சீராக்கப்படவில்லை, இதனுடன் என் மனமும் சேர்ந்துதான் சீரானது” என்றான்.
விடாமுயற்சியும் தன்னம்பிகையும் இருந்தால் நாம் செய்யும் செயல்கள் எதிலும் வெற்றியைப் பெற முடியும் என்கிற வெற்றிக்கான வழி அந்த வழிபோக்கனுக்குப் புரிந்தது.