தியானம் என்றால் என்ன?அந்தச் சிறுவனுக்கு நெடு நாட்களாய்த் தீராத சந்தேகம். அந்தச் சிறுவனின் பெற்றோருக்கோ சிறுவனுக்குப் புரிந்த மொழியில் சொல்லமுடியாத இயலாமை.
ஒருநாள் மூவரும் ரமண மகரிஷியைச் சந்திக்கச் சென்றிருந்த போது சிறுவன் ரமணரை நெருங்கி, தன் கேள்வியை முன் வைத்தான்.
ரமணரும் சிரித்துக் கொண்டே அந்தச் சிறுவனுக்கு இலையில் ஒரு தோசையைப் பறிமாறச் சொன்னார்.
அப்படியே சிறுவனிடம், “நான் எப்போ ‘ம்’ சொல்கிறேனோ, அப்போதுதான் சாப்பிட ஆரம்பிக்கணும். அதே மாதிரி எப்போ ‘ம்’ சொல்கிறேனோ அதன் பிறகு உன் இலையில் தோசை இருக்கக் கூடாது. புரிந்ததா?” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.
சிறுவனுக்கு மிகுதியான மகிழ்ச்சி. ஆனால், அவரைச் சுற்றியிருந்தவர்களுக்குக் குழப்பம்.
மகரிஷியின் ‘ம்’ க்காகத் தோசையில் ஒரு கையை வைத்தபடி தவிப்புடன் அவர் முகத்தைப் பார்த்தபடி இருந்தான். சிறுவனைச் சிறிது நேரம் காக்க வைத்த அவர் பின் ‘ம்’ என்று சொன்னார்.
அடுத்த சில நிமிடங்களுக்குள் இரண்டாவது ‘ம்’ வந்து விடக் கூடாதே என்ற பதைப்புடன் பெரிய பெரிய துண்டுகளாக எடுத்து அவசர அவசரமாகத் திணித்துக் கொண்டே மகரிஷியின் முகத்தைக் கவனிப்பதும், தோசையைப் பிய்த்துத் தின்பதுமாக இருந்தான் அவன்.
மகரிஷி புன்னகை மாறாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் அடுத்த ‘ம்’ சொல்வதாக இல்லை. தோசை முழுவதையும் அவன் சாப்பிட்டு முடித்து ஒரு துண்டை மட்டும் கையில் வைத்துக் கொண்டு, மகரிஷி சொல்லும் அடுத்த ‘ம்’ க்காகக் காத்திருந்தான்.
சுற்றியுள்ளவர்கள் அவர்களிருவரையும் கவனித்துக் கொண்டிருந்தான்.
கடைசியாக மகரிஷி ‘ம்’ என்று சொல்லவும் சிறுவன் தன் கையில் வைத்திருந்த கடைசித் துண்டை வாயில் போட்டுக் கொண்டான்.
அதன் பின்னர் மகரிஷி அவனைப் பார்த்து, “இரண்டு ‘ம்’ களுக்கு நடுவில் உன் கவனம் எப்படி தோசை மீதும், என் மீதும் இருந்ததோ, அதே போல், நீ எந்தச் செயலைச் செய்தாலும், அடிநாதமாக இறைவன் மேல் கவனம் வைத்திருந்தால், அதன் பெயர்தான் தியானம். இப்போது உனக்குப் புரிந்ததா?” என்றார் மகரிஷி சிரித்துக் கொண்டே.
ரமணர் சொன்ன அந்த இரண்டு ‘ம்’ கள் எவை என்று உங்களுக்குத் தெரியுமா?
அந்த இரண்டு ‘ம்’கள் வேறெதுமில்லை. வாழ்வும், சாவும்தான் அந்த இரண்டு ‘ம்’கள். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட நேரத்தில்தான் ஒருவன் தியானத்தில் இருக்க வாய்ப்பிருக்கிறது. அதைப் புரிந்து கொள்வதற்கான காலம்தான் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது.