ஒரு சந்நியாசி காலை நேரத்தில் மலை உச்சி மீது, தன்னந்தனியாக அமர்ந்து கொண்டிருந்தார்.
காலை வேளையில் அங்கு வந்த மூன்று பேர் அவரைப் பார்த்தார்கள்.
ஒருவர் சொன்னார், “காணாமல் போன பசுவை அவர் தேடிக் களைத்துப் போய் அமர்ந்திருக்கிறார்”
அடுத்தவர் சொன்னார், “இல்லை, அவர் அமர்ந்திருக்கிறதைப் பார்த்தால் அவர் எதையும் தேடி வந்ததாகத் தெரியவில்லை. அவர் தன் நண்பர்கள் யாரையே எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்”
மூன்றாமவர் சொன்னார், “நண்பர்களுக்காகக் காத்திருந்தால், அவர் சுற்றிலும் திரும்பிப் பார்க்க வேண்டுமே. அவர் அசையவே இல்லை. அவர் தியானத்தில் அமர்ந்திருக்கிறார்”
அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவரிடமே விவரம் கேட்டு விடுவோம் என்று அவரிடம் சென்றனர்.
முதலாமவர் கேட்டார், “ஐயா, நீங்கள் காணாமல் போன உங்கள் பசுவைத் தேடிக் களைத்துத்தானே இங்கு அமர்ந்து கொண்டிருக்கிறீர்கள்?”
சந்நியாசி கண்களைத் திறந்து பார்த்து, “எனக்குச் சொந்தம் என்று எதுவும் இல்லை. அதனால் எதுவும் காணாமல் போகவில்லை. எதையும் நான் தேடி இங்கு வரவும் இல்லை” என்றார்.
“அப்படியானால், நண்பர்களுக்காகத் தானே காத்திருக்கிறீர்கள்?” என்று இரண்டாமவர் கேட்டார்.
“நான் தனியாள். எனக்கு நண்பர்கள் என்று எவருமில்லை, பகைவர்களும் இல்லை. அப்படியிருக்க நான் யாருக்காகக் காத்திருக்க வேண்டும்?” என்றார் சந்நியாசி.
“அப்படியானால், நான் நினைத்ததுதான் சரி. நீங்கள் தியானம் தானே செய்கிறீர்கள்?” என்று கேட்டார் மூன்றாமவர்.
அதைக் கேட்டுச் சந்நியாசி சிரித்தார். “நீங்கள் ஏன் இப்படிப் பேசுகிறீர்கள். எனக்குச் சாதிக்க வேண்டியது எதுவுமில்லை. நான் எதற்காகத் தியானம் செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.
உடனே அந்த மூவரும், “நீங்கள் இங்கு வந்து என்னதான் செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டனர்.
“நான் எதையுமே செய்யவில்லை. நான் இங்கு சிறிது இளைப்பாறுவதற்காக அமர்ந்து கொண்டிருக்கிறேன், அவ்வளவுதான்” என்று சொல்லிச் சிரித்தார் அந்த சந்நியாசி.
தியானம் என்பதும் அதுதானே!